» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அருகே பொதுமக்கள் மீது அரிவாள் வீச்சு: போலீஸ் ஏட்டுக்கு வெட்டு - ரவுடி சுட்டுப்பிடிப்பு!

திங்கள் 1, ஜூன் 2026 8:10:53 AM (IST)



நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் புகுந்து பொதுமக்கள் மீது சரமாரியாக அரிவாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய ரவுடிக் கும்பலைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி, போலீஸாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது காலில் சுடப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில் நடந்த திருமண விழா ஒன்றில் பேனர் வைத்தபோது, போதையில் வந்த வாலிபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சிறிது நேரத்தில் தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் முகமூடி அணிந்து, கைகளில் அரிவாளுடன் 3 மோட்டார் சைக்கிள்களில் திருமண வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அக்கும்பல் அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக அரிவாள் வீச்சில் ஈடுபட்டது. இதில் நெட்டூரைச் சேர்ந்த ரமேஷ் (49), அருள்மாறன் (23), சந்தோஷ்குமார் (21), ராயப்பன் (18), ராம்குமார் (20) மற்றும் மேளக் கலைஞர் மாடசாமி (19) ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த போதைக் கும்பல் நெல்லை மாவட்டம் மானூர் அருகே தெற்குபட்டியிலும் புகுந்து அப்துல் ரகுமான் (34), முபாரக் (30) ஆகிய இருவரையும் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. காயமடைந்த 8 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த நெல்லை சரக போலீஸ் டிஐஜி (பொறுப்பு) தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ட்ரோன் கேமரா உதவியுடன் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் நெட்டூரைச் சேர்ந்த இசக்கிமுத்து (20), மாரியப்பன் (20), பிரமுத்து (21), பிரம்மதேசத்தைச் சேர்ந்த நவீன் (20), சஞ்சய் (20), நாலாயிரம் என்ற எலி (20), மருதுபாண்டி (31) மற்றும் 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 10 பேரை போலீஸார் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர்.


இவ்வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன் (21) முக்கூடல் அருகே அரசன்குளம் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அவரைச் சுற்றி வளைத்தபோது, ஐயப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனிப்படை போலீஸ் ஏட்டு முத்துக்குமாரை வெட்டியுள்ளார்.

இதையடுத்து, போலீஸார் தற்காப்பிற்காக ஐயப்பன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த ரவுடி ஐயப்பன் மற்றும் போலீஸ் ஏட்டு முத்துக்குமார் இருமடமும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்பி நேரில் விசாரணை:

விபரம் அறிந்த நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார், மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த போலீஸ் ஏட்டு முத்துக்குமாரிடம் விபரங்களைக் கேட்டறிந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். தற்போது அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சுடப்பட்ட ரவுடி ஐயப்பன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் ரவுடி பட்டியலில் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory