» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்: பிரேமலதா
ஞாயிறு 31, மே 2026 8:39:42 PM (IST)
"நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், தவெக தலைவர் விஜய்யே எனது இல்லம் தேடி வந்து எனக்குத் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: "நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு மாயையை உருவாக்கி, சுனாமி போல அமைந்தது. தேர்தலில் வெற்றி தோல்விகள் சகஜம்; அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது. மக்கள் புதிய ஆட்சிக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த இந்த வெகு குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் குற்றங்கள், மேகேதாட்டு விவகாரம், மின்வெட்டு மற்றும் விவசாயிகள் போராட்டம் எனப் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
யாரைத் 'தீய சக்தி' என்று விமர்சித்தார்களோ, இன்று அதே கட்சியின் ஆதரவோடுதான் 'தூய சக்தி' என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் ஆட்சியமைத்துள்ளனர். புதிய கட்சியின் ஆட்சிக்கு 6 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கள நிலவரப்படி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேமுதிக என்றால் பேரம் பேசுபவர்கள் எனப் பொய்யான களங்கத்தை ஏற்படுத்த முயன்றனர். பதவிக்கோ, பணத்துக்கோ ஆசைப்படாமல் நாம் பயணிக்கும் கூட்டணிக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் ஒரே கட்சி தேமுதிகதான். நான் நினைத்திருந்தால் விஜய்யைச் சந்தித்திருக்க முடியாதா? ஆனால், பதவிகளுக்கு ஆசைப்படும் கட்சி தேமுதிக இல்லை. நாம் எப்போதும் கொள்கைக்கும் கூட்டணி தர்மத்திற்கும் உண்மையாக இருக்கிறோம்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவை விட்டு அனைவரும் ஓடியபோது, அவர்களை மதித்து நின்ற ஒரே கட்சி தேமுதிகதான். ஆனால், 2024-ல் உறுதுணையாக நின்ற எங்களை மதிக்காமல், அன்று எடப்பாடி பழனிசாமியை விட்டு ஓடியவர்களை எல்லாம் 2026 தேர்தலுக்காக அழைத்து அவர் ஆலோசனை நடத்தினார். கூட்டணியை வலுப்படுத்த ஒருங்கிணைந்து மாநாடுகள் நடத்த வேண்டும் எனப் பலமுறை பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்தேன், அவர் கேட்கவில்லை.
எங்களை 'அரை சதவீத கட்சி', 'ஐசியுவில் உள்ள கட்சி' எனப் பழனிசாமி விமர்சித்தார். எங்களை மதிக்காத காரணத்தாலேயே கூட்டணியை விட்டு வெளியேறினோம். நம்மை அவர் குறைத்து மதிப்பிட்டதன் விளைவாக, 15 ஆண்டுகளாகப் பழனிசாமி தங்கியிருந்த அரசு இல்லத்தைக் கூட காலி செய்யும் நிலை இன்று வந்துவிட்டது. தற்போது அதிமுகதான் ஐசியுவுக்குச் சென்றுள்ளது.
கடந்த 2011-ல் தேமுதிக எம்.எல்.ஏக்களை விலைபேசி இழுத்து, அன்று தேமுதிகவுக்கு அதிமுக செய்த கொடுமை, இன்று தவெக மூலமாகப் பழனிசாமிக்கே திரும்பக் கிடைத்துள்ளது. அரசியலில் லாபத்திற்காக அங்கும் இங்குமாகத் தாவுபவர்களுக்கு எப்போதுமே எதிர்காலம் கிடையாது" என்று பிரேமலதா பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
ஞாயிறு 31, மே 2026 10:35:20 AM (IST)

நெல்லை அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 21 பேர் படுகாயம்!
ஞாயிறு 31, மே 2026 10:26:11 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி: 17 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 31 பேர் பணியிட மாற்றம்!
ஞாயிறு 31, மே 2026 9:29:04 AM (IST)

இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது!
ஞாயிறு 31, மே 2026 9:22:28 AM (IST)


