» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகக் கனிம வளங்களை அழிக்க பாஜக சதி? சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்!

வெள்ளி 8, மே 2026 9:03:22 PM (IST)



தமிழகத்தின் அரிய வகை கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்யும் வகையில், பாஜகவின் சதித் திட்டத்திற்குத் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் உடந்தையாகச் செயல்படுவதாகத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு சுயபரிசோதனை செய்யாமல், ஆட்சி அதிகாரத்திற்காகத் திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைவது தங்கள் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் செய்யும் துரோகம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் மணல், கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரு கட்சிகளும், தங்கள் கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்கவும், கனிமக் கொள்ளையைத் தொடரவுமே இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சாடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டங்ஸ்டன், மாலிப்டினம், கிராபைட், பிளாட்டினம் உள்ளிட்ட 30 வகையான அரிய வகை கனிமங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கூட இல்லாமல் வேதாந்தா, அதானி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எடுப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தடையாக இருக்க மாட்டார்கள் என்பதால் தான் ஏற்கனவே கொள்ளையில் ஈடுபட்ட கட்சிகளை பாஜக ஆதரிக்கிறது என ஒருங்கிணைப்பாளர் இரா. சா. முகிலன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தைஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது, தமிழக மக்களின் உணர்வுகளை மிதிக்கும் செயல் என்று அந்த இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தால் கனிமக் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும் என்ற அச்சமே இதற்குக் காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015-ல் சமர்ப்பிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் அறிக்கை (கிரானைட் முறைகேடு).2013-ல் வழங்கப்பட்ட ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் அறிக்கை (தாது மணல் கொள்ளை). போன்ற முக்கிய ஆதாரங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரு கட்சிகளும் நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, தமிழகக் கனிம வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory