» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று த.வெ.க. தலைவர் விஜய் வாக்கு சேகரிப்பு

சனி 18, ஏப்ரல் 2026 4:36:39 PM (IST)



சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று மாலை பெரம்பூர் தொகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்தார்.

பெரம்பூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிமனைக்கு விஜய் நேரில் சென்றார். அங்குப் பணியில் இருந்த பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்துப் பேசினார். விஜய்யின் இந்தத் திடீர் வருகையை எதிர்பாராத அங்கிருந்த பொதுமக்களும் தொண்டர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பணிமனையைச் சுற்றிப் பார்த்த விஜய், அங்குப் பெண்கள் வரைந்து கொண்டிருந்த ‘விசில்’ சின்னம் குறித்த கோலத்தில் தானும் இணைந்து வரைந்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பணிமனை வருகையைத் தொடர்ந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு விஜய் நேரில் சென்றார். ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ள குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்து உரையாடினார். ஒரு வீட்டில் அவருக்குப் பெண்கள் தண்ணீர் கொடுத்து வரவேற்றனர். மற்றொரு வீட்டில் மூத்த பெண்மணி ஒருவர் விஜய்க்கு விபூதி பூசி, தேர்தலில் வெற்றி பெற மனதார வாழ்த்தினார்.

குடியிருப்புப் பகுதிகளில் திரண்டிருந்த குழந்தைகளுடன் விஜய் சிறிது நேரம் அமர்ந்து பேசி மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த சிறுவர்கள் தங்களது கட்சியின் சின்னமான விசிலை ஊதி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய விஜய், "வரும் தேர்தலில் மறக்காமல் 'விசில்' சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு தாருங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.

பெரம்பூர் பகுதியில் விஜய் திடீரென மேற்கொண்ட இந்தச் சந்திப்பு மற்றும் அவர் எளிமையாக வீடுகளுக்குள் சென்று பொதுமக்களுடன் உரையாடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory