» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தை - மகன் கொலை வழக்கில் ஏப்.2-ல் தண்டனை அறிவிப்பு : சி.பி.ஐ மீது நீதிமன்றம் அதிருப்தி !
செவ்வாய் 31, மார்ச் 2026 8:31:34 AM (IST)
உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 9 போலீசாருக்கான தண்டனை விவரங்களை, மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ஆம் தேதி) அறிவிக்க உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி செல்போன் கடையைத் திறந்ததாகக் கூறி போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதில், தந்தை மற்றும் மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்தது. இதில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கியச் சாட்சியங்களை அளித்தனர்.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி, கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று (மார்ச் 30) அறிவிக்கப்படும் என்றும், இது குறித்து சி.பி.ஐ மற்றும் தமிழக அரசு தங்களது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தாமதத்திற்கு நீதிபதி அதிருப்தி:
நேற்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாரும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் ஆஜராகி, "உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வேண்டும்" எனக் கோரினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி முத்துக்குமரன், "இந்த வழக்கு மிகவும் தீவிரமானது. இதன் ஒவ்வொரு கட்ட விசாரணையும் செய்திகளாக வெளிவரும் நிலையில், தகவல் கிடைக்கவில்லை எனக் கூறுவது ஏற்புடையதல்ல" என்று தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்தார்.
நாளை மறுநாள் இறுதித் தீர்ப்பு: "குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து பதில் அளிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? மாநில அரசும் இன்னும் அறிக்கை அளிக்கவில்லை," என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு (நாளை மறுநாள்) ஒத்திவைத்தார். அன்றைய தினம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அன்றே தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, 9 போலீசாரும் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
புதன் 1, ஏப்ரல் 2026 10:28:37 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
புதன் 1, ஏப்ரல் 2026 10:21:56 AM (IST)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

நெல்லையில் 2½ வயது பெண் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை!
புதன் 1, ஏப்ரல் 2026 8:13:11 AM (IST)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

