» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தை வெளியிட்டால் தடுத்து நிறுத்துவோம்: சீமான் எச்சரிக்கை
செவ்வாய் 3, மார்ச் 2026 3:41:55 PM (IST)
தமிழகத்தில் ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், தற்போது ‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தையும் திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது.
உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயே பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் ஏற்கின்றோம், மதிக்கின்றோம். மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை. ‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழி விடு’ என்பது தான் நாம் ஏற்க வேண்டிய மாந்தநேய கோட்பாடு.* மாறாக இந்நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழும் இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை தவறாகக் காட்டி வெறுப்பு நஞ்சினை விதைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
இசுலாமிய பெருமக்களை இழிவுப்படுத்தும் வழக்கமான குற்றக்காட்சிகளையும் தாண்டி, ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் கட்டாய மதமாற்றம், லவ்ஜிகாத், கூட்டுப்பாலியல், மாட்டுக்கறி திணிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இசுலாமிய மத அடையாளங்களை இணைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்காதவற்றைக் குரூர கற்பனையில் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம்தான் என்ன? அதே போன்று நிகழ்வுகள் நடந்து நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பதா? நடக்காதவற்றைத் திரைப்படமாக எடுப்பவர்களுக்கு, நம் கண்முன்னே நடைபெற்ற மணிப்பூர் கலவரத்தையும், குஜராத் கலவரத்தையும் திரைப்படமாக எடுக்கும் துணிச்சல் உண்டா? குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தைப் பிபிசி நிறுவனம் எடுத்தபோது அதைத் திரையிட பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்?
'காஷ்மீர் பைல்ஸ்’, ‘புர்கா’ ‘கேரளா ஸ்டோரி1’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படமும் இஸ்லாமிய மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் திட்டமிட்டு இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இது மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் உள்நோக்கமுடையது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றும் காட்சிப்படுத்தல்கள் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை. படைப்புச்சுதந்திரத்தைவிட முக்கியமானது இந்த நாட்டு மக்களின் உணர்வும், உரிமையும், ஒற்றுமையும், ஒருமைப்பாடுமாகும். அதைச் சீர்குலைக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துத் தமிழ்நாடு அரசு ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், எப்படி ‘கேரளா ஸ்டோரி1’ திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி போராடி தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தியதோ, அப்படி ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு, நாங்கள் வைக்கும் வேண்டுகோள் மதக்கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
என் அன்புச்சொந்தங்கள் குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் இத்திரைப்படத்தை முற்று முழுதாகப் புறக்கணிப்பதோடு, திரைப்படம் திரையிடப்படாமல் பெருந்திரளாகத் திரண்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சமூக சேவை : தூத்துக்குடி நீதிக்குழுமம் தீர்ப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 7:40:21 PM (IST)

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:42:34 PM (IST)

மதுரை மண்டல பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மாற்றம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:36:11 PM (IST)

நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவம்: திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:05:13 PM (IST)

திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:38:38 PM (IST)

அக்னிவீர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:23:31 PM (IST)

