» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப்-2, 2ஏ தேர்வு திடீர் ரத்து: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இடமாற்றம்

திங்கள் 9, பிப்ரவரி 2026 10:57:46 AM (IST)

தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனால், சென்னையில் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 1,188 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற இருந்தது.

காலையில் குரூப்-2 பாடத் தேர்வும்,பிற்பகலில் குரூப்-2, 2ஏ இரண்டுக்குமான கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப்-2 மெயின் தேர்வுக்கு 1,126 பேர், குரூப்-2ஏ மெயின் தேர்வுக்கு 9,457 பேர் என மொத்தம் 10,583 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் ஆன்லைனில் வழங்கப்பட்டது.

சென்னையில் மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி உட்படதமிழகம் முழுவதும் 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையின் 3 மையங்களில் 3,221 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை அரும்பாக்கம் கல்லூரிக்கு சென்ற 600 தேர்வர்களில் 400 பேருக்கு அங்கு பதிவெண்கள் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அந்த கல்லூரியை குறிப்பிட்டுதான் அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதனால் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்த அவர்கள் இதுகுறித்து தேர்வு மைய அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு அதிகாரிகள், ‘‘ஒருவேளை உங்களுக்கு நந்தனம் கல்லூரி ஒதுக்கப்பட்டிருக்கலாம். அங்கு சென்று பாருங்கள்’’ என்று கூறியுள்ளனர். தேர்வு தொடங்கும் நேரத்தில், அங்கு எப்படி செல்ல முடியும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள், மையத்தைவிட்டு வெளியே வந்து பூந்தமல்லி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘நாங்களே உங்களை நந்தனம் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறோம்’’ என்றனர். தேர்வர்கள் அதை ஏற்கவில்லை. சிறிது நேரத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் அங்கு வந்தார். தேர்வர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றார்.

அடுத்த சில நிமிடங்களில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ மெயின்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதைஅடுத்து, சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. இதற்கிடையே, சென்னை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் குறித்த நேரத்தில் தேர்வுகள் தொடங்கிவிட்டன. சுமார் ஒரு மணி நேரம்வரை தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு ரத்தான தகவல், அங்குள்ள தேர்வு மைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அங்கும் தேர்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. பரபரப்பாக தேர்வு எழுதிய தேர்வர்கள், தேர்வு ரத்து செய்யப்பட்ட தகவலை அறிந்து, ஏமாற்றத்துடன் மையங்களைவிட்டு வெளியேறினர். தேர்வு மைய ஒதுக்கீட்டில் நிகழ்ந்த குளறுபடிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குரூப்-2, 2ஏ மெயின் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள மையங்களில் பிப்.8-ம் தேதி (நேற்று) காலையும், பிற்பகலும் நடைபெற இருந்த குரூப்-2,குரூப்-2ஏ மெயின் தேர்வுகளை நடத்தஇயலவில்லை. இதனால், தேர்வர்களின் நலனை முன்னிட்டு காலை மற்றும் பிற்பகலில் நடக்க இருந்த 2 தேர்வுகளும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பின்னர் வேறு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும். மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 நாட்கள் முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் விவரம் தெரிவிக்கப்படும். குரூப்-2 பொது அறிவு தாள் தேர்வு திட்டமிட்டபடி பிப்.22-ல் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை: இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய அலுவலராக வெங்கடபிரியா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory