» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கர்ப்பிணி பெண் மர்மசாவில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய அரசு ஊழியர் கைது!

செவ்வாய் 27, ஜனவரி 2026 7:48:56 AM (IST)

மானூர் அருகே கிணற்றில் கர்ப்பிணி மர்மமான முறையில் பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்து நாடகமாடிய கணவரான அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே குப்பனாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அந்தோணி (25). இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்த மோசே மகள் பாக்கியத்தாய்க்கும் (23) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

பாக்கியத்தாய் 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் மதியம் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மானூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த பாக்கியத்தாயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது, திருமணமான சில நாட்களிலேயே மனைவி பாக்கியத்தாயை வேலைக்கு செல்லுமாறு கணவர் அந்தோணி கூறி வந்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் மனைவியின் வீட்டில் இருந்து கூடுதலாக நகை, பணம் வாங்கி வருமாறு கூறி அந்தோணி அடிக்கடி தகராறு செய்தாராம்.

நேற்று முன்தினம் காலையில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்லலாம் என்று கூறி மனைவி பாக்கியத்தாயை அந்தோணி அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அந்தோணி துண்டால் மனைவி பாக்கியத்தாயின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அங்குள்ள தோட்டத்தின் கிணற்றில் வீசி விட்டு சென்றார். மாலையில் மனைவி பாக்கியத்தாயை காணவில்லை என்று கூறி தேடுவது போன்று அந்தோணி நாடகமாடினார். 

மேலும் அவர் தனது தாயார் மூலம் மானூர் காவல் நிலையத்தில், மருமகளைக் காணவில்லை என்று கூறி புகார் கொடுக்க செய்தார். இதற்கிடையே பாக்கியத்தாயின் அண்ணன் அந்தோணியும் தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரிடம் கணவர் வீட்டார் கூடுதலாக 10 பவுன் நகை அல்லது ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் புகார் அளித்தார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாக்கியத்தாயை அவரது கணவர் அந்தோணியே கழுத்தை நெரித்துக் கொன்று உடலை கிணற்றில் வீசி விட்டு, அவரை தேடுவது போன்று நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மானூர் அருகே திருமணமான 8 மாதங்களில் கர்ப்பிணி மனைவியை கணவரே கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசிய பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory