» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்!

திங்கள் 29, டிசம்பர் 2025 5:07:43 PM (IST)



பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் இளங்கோ பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கினார்.

திருநெல்வேலி வனக்கோட்டத்திற்குட்பட்ட ஈர நிலங்களில் மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி, 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய இரு தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், திருப்புடைமருதூர் பறவைகள் பாதுகாப்பகம், விஜயநாராயணம், வேய்ந்தான்குளம், கங்கைகொண்டான், ராஜவள்ளிபுரம் உட்பட்ட மாவட்டத்தின் மிக முக்கியமான நீர்வாழ் பறவைகள் காணப்படும் ஈரநில பகுதிகளில் வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கொண்ட குழுவினர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டனர். ஈர நிலங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள பசுமையான வயல் வெளிகளில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் காணப்பட்டன.

கூழைக்கடா, செங்கால்நாரை, குமிழ்வாய் வாத்து, வரித்தலைவாத்து, நாமக்கோழி, சிவப்புக்கால் உள்ளான், பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, பவளநிற அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், கருந்தலை அரிவாள் மூக்கன், நீலவால் தாமரைக்கோழி, கானாங்கோழி, ஜம்புக்கோழி போன்ற பறவைகள் காணப்பட்டன.குறிப்பாக குப்பகுறிச்சி மற்றும் கல்குறிச்சி ஈர நிலங்களுக்கு இடையே உள்ள வயல்வெளியில் ஒரே இடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கருவாலை மூக்கன் பறவைகள் காணப்பட்டது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் தெரிவிக்கும் போது: இப்பறவைகள் மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுமையான குளிர்காலம் காரணமாக தெற்காசிய பகுதிளில் சாதகமான தட்ப வெப்பநிலை மற்றும் உணவு கிடைக்கும் இடங்களுக்கு அக்டோபர் மாதம் முதல் இடம் பெயர்ந்து மார்ச் மாதத்திற்கு பிறகு மீண்டும் மத்திய ஆசிய பகுதிகளுக்கு திரும்பி செல்லும் என்றும், நமது மாவட்டத்தில் அமைந்துள்ள வளமான ஈர நிலங்கள், பறவைகளுக்கு உகந்த தட்பவெப்பநிலை, அமைதியான வயல்வெளிகள் மற்றும் உள்ளுர் மக்களின் ஆதரவு காரணமாக நமது மாவட்டத்திற்கு தொடர்ந்து வெளிநாட்டு பறவைகள் உணவுக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் வருவதாகவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்கள்.

மேலும், பறவைகள் கணக்கெடுப்பு பணியினை களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக இயக்குநர் ஆனந்த் இ.வ.ப., மேற்பார்வையிட்டார். தொடர்ந்து இருநாட்கள் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory