» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மரக்கடையில் விஜய் பிரசாரத்தால் ரூ.1¼ லட்சம் சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

திங்கள் 15, செப்டம்பர் 2025 12:00:41 PM (IST)

திருச்சியில் விஜய் பிரசாரத்தால் கடைகளில் ரூ.1¼ லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரசாரத்தை நேற்று முன்தினம் திருச்சியில் தொடங்கினார். இதற்காக தனி விமானத்தில் திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் பிரசாரம் நடக்கும் இடமான திருச்சி மரக்கடைக்கு புறப்பட்டார். அப்போது தொண்டர்கள் சூழ்ந்ததால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து பிரசாரம் செய்வதற்கான இடத்திற்கு வர சுமார் 5 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே மரக்கடை பகுதியில் விஜய் பேசுவதை கேட்பதற்கு த.வெ.க. தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு 7 மணி நேரம் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலர் உற்சாகத்துடன் கோஷமிட்டனர். சிலர் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது ஏறி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து விஜய் மரக்கடை பகுதிக்கு வந்து பேசிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், நான் மரக்கடை பகுதியில் கதவு, மேஜை, ஜன்னல், நாற்காலிகள் உள்ளிட்ட மரப்பொருட்கள் விற்பனை செய்து வருகிறேன். த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்ய வருகை தந்தார்.

அப்போது அங்கு கூடி நின்ற த.வெ.க. தொண்டர்கள் எனது கடை மற்றும் அருகில் உள்ள 2 கடைகள் மீது ஏறி நின்று ஆரவாரம் செய்ததில், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மரப்பொருட்கள் சேதமடைந்தன. பல மரப்பொருட்களை திருடிவிட்டு சென்றனர். 

இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த பொருட்கள் மற்றும் திருட்டு போன பொருட்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார், தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory