» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வகுப்பறையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது

வெள்ளி 4, ஜூலை 2025 10:58:15 AM (IST)

கோத்தகிரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவர் அறிவியல் வகுப்பு எடுத்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பாலியல் கல்வி குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு முடிந்ததும் அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் போலீசாரிடம், எங்கள் பள்ளியில் அறிவியல் ஆசிரியாக வேலை பார்த்து வரும் செந்தில்குமார் என்பவர் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

அவர் இதுபோன்று பல மாணவிகளையும் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பள்ளியில் படித்த 21 மாணவிகள் தங்களுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சியான போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரித்தனர். விசாரணையில் முடிவில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டியில் உள்ள கிளை ஜெயிலில் அடைத்தனர். 

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செந்தில்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இதுதொடர்பாக சில மாணவிகள் ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இதனை அறிந்த அவர் அந்த மாணவிகளை மிரட்டியதால் அவர்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி உள்ளதால், முன்பு பணியாற்றிய பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளரா? என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் இணைந்து இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory