» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி தனது பதவியை இழந்தார். தி.மு.க.வை சேர்ந்த அவரை, அவரது கட்சியினரே கவிழ்த்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் 12 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 9 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் ம.தி.மு.க.வும், காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. தலா 1 வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தலைவியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். துணை தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணன் தேர்வானார்.
இந்தநிலையில், நகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை நகராட்சி தலைவிக்கு எதிராக தி.மு.க.வினரே கூறிவந்தனர். இதனால் நகராட்சி கூட்டங்களில் வாக்குவாதம், தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு தி.மு.க. கவுன்சிலர்கள், அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் இணைந்து உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது இந்த பிரச்சினையில் தி.மு.க. தலைமை தலையிட்டு, சமரசப்படுத்தியதால் அவரது பதவி தப்பியது.
சில மாதங்களுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அதாவது, உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடந்த மாதம் 2-ந்தேதி தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 24 பேர் கையெழுத்திட்டு நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஜூலை மாதம் 2-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக கவுன்சிலர்கள் வந்தனர். ஆணையாளர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உமா மகேஸ்வரி பங்கேற்கவில்லை.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் மட்டும் எதிராக ஓட்டு போட்டனர். இதன்மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் உமா மகேஸ்வரி நகராட்சி தலைவி பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தி.மு.க.வைச் சேர்ந்த நகராட்சி தலைவிக்கு எதிராக அக்கட்சியினர், அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெறச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்!
வியாழன் 3, ஜூலை 2025 8:55:59 AM (IST)

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)
