» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வள்ளலார் சர்வதேச மையம் பணிகளை நிறுத்த வேண்டும்.. இந்து முன்னணி வலியுறுத்தல்!!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 3:10:14 PM (IST)

வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "வடலூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெருமானார் இராமலிங்க சுவாமிகள் திருப்பாதம் பட்ட புனித இடம் சத்திய ஞான சபை பெருவெளி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் இறைவனுடன் ஜோதி வடிவாக ஐக்கியமான தைப்பூச தினத்தில் ஜோதி தரிசன அருட்காட்சியை காண பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். 

அந்த பக்தர்களுக்கு வள்ளலாரின் விருப்படி நூற்றாண்டுகளாக அன்னதானம் வழங்குவது தமிழகத்திற்கு எடுத்துக்காட்டான பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்நிலையில் சத்திய ஞான சபைக்கு அருகில் வள்ளலார் ஆன்மீக சேவைக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த சுமார் நூறு ஏக்கர் கொண்ட இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு அறிவித்தது. வள்ளலாரின் நோக்கத்திற்கு எதிராக, வள்ளலாரின் பெருவழி தத்துவத்திற்கு எதிராக தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆரம்பம் முதலே இந்து முன்னணி கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. 

தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய மக்களிடம் பக்தர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி போராட்டமும் நடத்தியது. மேலும் தமிழக அரசு திட்டமிட்டுள்ள வள்ளலார் சர்வதேச மையம் அரசின் இடத்தில் அமைய வேண்டும். அதில் வள்ளல் பெருமகனார் வாழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ந்த ஆன்மீக அற்புதங்களை முதன்மை படுத்த வேண்டும். திமுகவின் கொள்கைகளை எந்த வகையிலும் மறைமுகமாகக் கூட திணித்து வள்ளலாரின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்த முனைந்தால் இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கும். 

நேற்று வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி கிராம மக்கள் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி உள்ளனர். மக்களின் விருப்பத்திற்கு இந்து முன்னணி ஆதரவை தெரிவிக்கிறது. ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துபவர்களை அதிகாரத்தை கொண்டு மிரட்டி பார்ப்பதைவிட வள்ளலார் பக்தர்களின் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு உணரவேண்டும். 

அதே வேளையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தல் காலம் என்பதால் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கில் கம்யூனிஸ்ட் நக்சலைட் போன்ற பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களிடைய ஊடுருவி தன்னெழுச்சியாக அமைதியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறை காலமாக மாற்றியது போல் இங்கும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

எனவே தமிழக அரசு விழிப்புடன் நடந்து கொண்டு தமிழக அரசு வள்ளலார் பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்க சத்திய ஞான சபை பெருவெளியில் திட்டமிட்ட கட்டட கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும். மக்கள் விருப்பத்திற்கு எதிராக சர்வாதிகாரியாக செயல்படுவதை திமுக ஆட்சியாளர்கள் கைவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory