» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா உறுதி செய்யப்பட்டால் 8 கி.மீ. சுற்றி வரை உள்ளவர்களை தனிமைப்படுத்த முடிவு!

ஞாயிறு 29, மார்ச் 2020 8:52:15 AM (IST)

கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்கள் இன்று முதல் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்குவதற்காக மனநல ஆலோசகர்கள் மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால உதவி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் மாவட்டங்களான சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 13 மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் வரையறுக்கப்பட்டது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒவ்வொரு கரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றிலும் உள்ள 8 கிலோ மீட்டர் தொலைவு வரை தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற வகையில் வீடு வீடாக சென்று நோய் தொற்று கண்டறியும் பணி மேற்கொள்வர். 4 பணியாளர்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்வார். இக்குழுவினர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நபர்களை கண்டறிந்து, அந்த நபர்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, வயதானவர்களின் விவரங்களையும் சேகரிப்பர்.

மேலும், நோய் தொற்று அதிகமாக ஏற்படக்கூடும் என கருதப்படும் பிரிவினர் மீது தனி கவனம் செலுத்தப்படும். இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்படுவர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் கரோனா நோய் தடுப்பு குறித்த தகவல்களை பெறுவதற்கும் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும் சாட் போடினை தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மூலமும் அனுமதி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory