» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட இளைஞர்கள்!

வியாழன் 18, ஏப்ரல் 2024 5:10:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இது போல் வெளியூரில் வசிக்கக் கூடியவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். 

நாடு முழுவதும் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நாளைய தமிழகத்திலும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

மேலும் ஓட்டு போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போதும் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

அதே போல் இந்த முறையும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க செய்யும் வகையில் கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.

முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளியூரில் வசிக்கக் கூடியவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களும் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

நேற்றைய தினம் முதலே இதனை காண முடிந்தது. சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருந்தது.

வழக்கமாக நாகர்கோவில் வரக்கூடிய ரெயில்களில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தான் ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நாகர்கோவில் வரும் வரை கட்டுக்கடங்காத வகை காணப்படும். கடந்த இரு தினங்களாக அதேபோன்ற ஒரு கூட்டத்தை காண முடிந்தது.

இன்றும் சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

ஏராளமானோர் தங்களின் குடும்பத்துடன் வந்தனர். அந்த கூட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் காணப்பட்டனர். அவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் படிக்கக்கூடிய இளைஞர்கள் ஆவர். தேர்தல் நாளன்று பொது விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருக்கிறார்கள்.

பலர் தேர்தலில் வாக்களித்துவிட்டு உடனடியாக திரும்பும் வகையிலும் திட்டமிட்டு வந்துள்ளனர். பல இளைஞர்கள் பயணத்தின்போது சக நண்பர்களுடன் தேர்தலில் வாக்களிப்பது குறித்து மிகவும் ஆர்வமாக பேசி வந்ததை காண முடிந்தது. அவர்களில் பல இளைஞர்கள் முதன் முதலாக தேர்தலில் வாக்களிப்பதாக பேசிக் கொண்டனர். அந்த இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து சக பயணிகளிடம் பேசியபடி இருந்தனர். அதே நேரத்தில் தேர்தலில் வாக்களித்து விட்டு மீண்டும் வெளியூருக்கு செல்வதற்கான பயணத்திட்டத்தையும் நண்பர்களுடன் விவாதித்தனர்.

குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பி இருக்கிறது.

மேலும் விளவங்கோடு சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் என இரண்டு ஓட்டுகள் போட வேண்டும். இதனால் மற்ற சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்களை காட்டிலும் விளவங்கோடு சட்டசபை தொகுதி வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.  அந்த தொகுதியை சேர்ந்த புதிய வாக்காளர்களான இளைஞர்கள், முதன் முறையாக சந்திக்கும் தேர்தலிலேயே இரு ஓட்டுகள் போடும் வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி பூரிப்படைந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory