» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

வெள்ளி 5, ஜனவரி 2024 4:35:07 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோணத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (05.01.2024) தலைமை செயலகத்தில் இருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்பித்து உள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோணம் மற்றும் கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட காஞ்சாம்புரம் பழைய சந்தை வளாகத்தில் கட்டுமான உத்திரவாத நிதியின் கீழ் தலா ரூ.2.50 கோடி என மொத்தம் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, கன்னியாகுமரிமாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்:-

கன்னியாகுமரி மாவட்டம் கல்வி அறிவு நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. இங்கு படித்த இளைஞர்களுக்கு போட்டித்தேர்வுகள், வேலைநாடுநர்களுக்கு தேவையான வழிகாட்டி மையங்கள் மிக குறைவாக இருப்பதால் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டி மையங்களாக கோணம் மற்றும் காஞ்சாம்புரம் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் திகழும் என்பதில் ஐயம் இல்லை. 

இப்புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும், பட்டதாரி இளைஞர்களுக்கும், வேலை நாடுநர்களுக்கும் மிகவும் பயன்படும் வகையில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இம்மையங்களில் 3000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவுசார் மையம் என்பது அனைத்து பள்ளி மாணவ மாணவியர்கள், வேலை தேடுபவர்களுக்கும் எளிதான விதத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கும் TNPSC Group –I,Group –II, SSC, UPSC எளிதான விதத்தில் தயாராகும் வகையில் இந்த அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட அளவிலும், மாநகராட்சி, ஊராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகள் அளவிலும் அனைவருக்கும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து பகுதிகளில் உள்ள நூலகத்திலும் ஏற்பாடு செய்துள்ளோம். பல்வேறு இடங்களில் பாரமரிப்பு இல்லாத நூலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இளம் வயதில் அனைத்து மாணவர்களுக்கும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தங்களை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் நம்முடைய வாசிப்பு பயிற்சி உயரும். இதன் மூலம் போட்டித்தேர்வுகளை எளிதாக அணுகலாம்.

மேலும் இந்நூலகமானது ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும். வெள்ளி கிழமை அன்று விடுமுறை. எனவே போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் அனைவரும் இந்நூலகத்தினை பயன்படுத்துவதோடு, அறிவுசார் மையத்தின் வாயிலாக தங்கள் திறமைகளை உயர்த்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்கள். 
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் குத்துவிளக்கேற்றி, புத்தகங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டதோடு, பள்ளி மாணவ மாணவியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர்கள் செல்வகுமார், ஜவஹர், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பாலசுப்பிரமணியம், கொல்லங்கோடு நகர்மன்ற தலைவர் ராணி, நகராட்சி ஆணையர் (பொ) ராமதிலகம், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் சிஜி பிரவின், அமல செல்வன், தங்கராஜா, அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory