» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மகனின் பிணத்துடன் இரவு முழுவதும் வசித்த பெண்

வெள்ளி 22, டிசம்பர் 2023 5:26:08 PM (IST)

நூலக கட்டிட கதவை பூட்டிக் கொண்டு மகனின் பிணத்துடன் இரவு முழுவதும் வசித்த பெண் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் கேசவ திருப்பாபுரம் மூன்லைட் அவென்யூ பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் முன்பு நூலகம் செயல்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தில் ஆதரவற்ற ஒரு ஆணும், பெண்ணும் வசித்து வந்தனர். இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து உணவளித்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நூலகத்தில் இருந்த 40 வயது ஆண் இறந்து விட்டார். இதனை அறியாமல் பிணத்துடன் இருந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த பொதுமக்கள் அவர் இறந்து விட்டதாக பெண்ணிடம் தெரிவித்தனர். ஆனால் அந்த பெண் அவர் இறக்கவில்லை, தூங்கிக் கொண்டிருக்கிறார், யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றார்.

உடனே அந்த பகுதி மக்கள் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.இதனை கவனித்த பெண், நூலகத்திற்குள் சென்று பிணத்துடன் இருந்தபடி கதவை பூட்டினார். மேலும் தங்களை தொந்தரவு செய்தால் தற்கொலை செய்வேன் என மிரட்டியுள்ளார். பின்னர் போலீசார் இரவாகி விட்டதால் அங்கிருந்து கிளம்பினர்.

பின்னர் நேற்று காலையில் மகளிர் போலீஸ் துணையுடன் வடசேரி போலீசார் மீண்டும் வந்தனர். பிறகு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். தொடர்ந்து நூலகத்தில் பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு முழுவதும் விடிய, விடிய பிணத்துடன் வசித்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் பாஸ்கர் என்றும், உடன் இருந்த பெண் அவரது தாயார் புஷ்பம் என்பதும் தெரியவந்தது. இவர்களுடன் இருந்த மணி என்பவர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு இறந்துள்ளார். அவர் புஷ்பத்தின் மற்றொரு மகன் ஆவார்.

இவர்கள் 3 பேரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. நூலகத்தில் வசித்த நிலையில் தற்போது இரு மகன்களும் இறந்ததால் தாய் புஷ்பம் பித்து பிடித்ததை போல் இருக்கிறார் என அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory