» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் மாபெரும் சிறுதானிய உணவு திருவிழா: ஆட்சியர் ஸ்ரீதர் வைத்தார்

வெள்ளி 15, டிசம்பர் 2023 4:29:40 PM (IST)



நாகர்கோவிலில் மாபெரும் சிறுதானிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், துவக்கி வைத்து பார்வையிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் நாகர்கோவில் வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் சிறுதானிய உணவு திருவிழா நிகழ்ச்சி இன்று (15.12.2023) நடைபெற்றது. இந்த உணவு திருவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் துவக்கி வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவு அரங்குகளை பார்வையிட்டு தெரிவிக்கையில்:-

2013-ல் இந்தியாவில் உணவு பாதுகாப்புசட்டம் 2013 கொண்டு வரப்பட்டது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆரோக்கியக் கேடும், குறை ஆயுளும் கொண்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். இயற்கையையும், விவசாயத்தையும், மதிக்கவும், மாற்றவும் தவறியதன் விளைவாகத்தான் நாம் பல கொடிய நோய்களின் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளோம். தொழில் நுட்பத்தை கொண்டு காற்றையும், நீரையும், மண்ணையும் சுற்றுச்சூழலையும், வேளாண் விளை நிலங்களையும், விளை பொருள்களையும், உணவுப் பொருள்களையும் இரசாயனம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களால் நஞ்சூட்டி வைத்திருக்கிறோம். 

இதன் விளைவு எங்கு பார்த்தாலும் புற்றுநோய், யாரைக் கேட்டாலும் சர்க்கரை நோய். இந்நிலையிலிருந்து மீண்டு நாம் இயற்கைப் பாதைக்கு திரும்பியாக வேண்டும். அதற்கான முதல் படி நம் முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானிய உணவுகளையும், நஞ்சில்லா இயற்கை உணவுகளையும், உண்ணுவது பற்றி விழிப்புணர்வை பெறுவதே ஆகும். 

இதனைக் கருத்தில் கொண்டு 2023ம் ஆண்டினை உலக சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டினை சிறுதானிய ஆண்டாக கொண்டாடிட ஆணையிட்டுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக சிறுதானிய உணவு திருவிழா 2023 சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது பருவ கால மாற்றத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் சிறுதானிய வேளாண்மையே தீர்வாக உள்ளது. 2 சென்டி கிரேட் புவி வெப்பம் உயர்ந்த பொழுதும் சிறுதானியங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. "உணவே மருந்து" என்ற நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு உண்ட சிறுதானிய உணவுதான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு மூல காரணம். இன்றைய இளந்தலைமுறையினர் "மருந்தே உணவு” என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கங்கள். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட நெட் ஒர்க் கம்பெனிகள் பலவிதமான சத்து மாத்திரைகளையும், மருந்துகளையும் அதிக விலையில் விற்கின்றனர். அதை தயங்கமால் வாங்கி சாப்பிட்டு நம் உடலில் இன்னும் விஷத்தை சேமிக்கின்றோம். அதிக எடையும் உடல் பருமனும் முக்கியமான ஒரு சுகாதார பிரச்சனையாக உருவெடுத்து நிற்கிறது. உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளில் 50% குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள். தாய்மை பேறு அடையக்கூடிய வயதில் உள்ள பெண்களில் 50% இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மாற்றாக பாரம்பரிய விவசாய முறைகளையும் உணவுப் பழக்கத்தையும் மாற்றினால் நாம் ஆரோக்கிய வாழ்வு வாழலாம். வாரத்திற்கு 10 வேளையாவது சிறுதானிய உணவு உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டு வருவோம். மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவோம். நாம் சாப்பிடுவதன் மூலம் சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்போம்.

சிறுதானியம் ஒரு சத்துமிக்க அருந்தானியம். சிறுதானியங்கள் பயிர் செய்வது என்பது ஒரு சிறந்த வேளாண் முறையாகும். சிறுதானியம் பயிர் செய்யப்பட்ட வயல்களில் பல்லுயிர் வளம் மிகுதியாக இருந்தது. வெறும் உணவாக மட்டுமல்ல மக்களின் உணவு கலாச்சாரத்தோடும் வேளாண் முறைகளோடும் பின்னிப் பிணைந்துள்ளது. பழங்காலத்தில் வேளாண்மை தன்னாட்சிக்கு உதவியது. சிறுதானியம் பயிரிடும் உழவர்களே, எதிர் காலத்தில் உணவும் தண்ணீரும் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலும் சிறுதானியங்களே நம்மை பாதுகாக்கும் உணவாகும். 

சிறப்புமிக்க சிறுதானியம் மனிதருக்கு தேவையான சரிவிகித உணவை தரக்கூடியது புஞ்சை தானியங்களே, சிறு தானியங்களை சாகுபடி செய்ய மிக குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. கரும்பு, வாழை, நெல் போன்ற பயிர்களுக்கு தேவையான தண்ணீரில் 25% போதுமானது. 15 சென்டி மீட்டர் ஆழம் உள்ள வயல்களிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. சிறுதானியங்கள் வறண்ட நிலத்தில் பயிர் செய்வதால் பூச்சிகள் தாக்குவதில்லை. 

பெரும்பான்மையான தானியங்கள் சேமித்து வைக்கும் போதும் பூச்சி தாக்காது. மானாவாரி நிலம் போதுமானது சிறுதானியம் பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் தாங்கி வளரக் கூடியது. உணவு, தீவனம், ஆரோக்கியம், ஊட்டச்சத்து, வாழ்வாதாரம், உயிர்ச்சூழல், பாதுகாப்பு போன்ற பலதரப்பட்ட உத்திரவாதம் தரக்கூடியது. நாம் அன்றாடம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி, கோதுமையை விட சிறுதானியங்களில் ஊட்டச்சத்து மிக அதிகமாகும். 

அருந்தானியங்கள் (சிறுதானியம்) மற்றும் முற்றியலும் நஞ்சில்லா இயற்கையான உணவுகளான தினை முக்கியப்பங்கு ஆற்றுகிறது. இது முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுத்து, எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது. குதிரைவாலி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. கேழ்வரகு பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகரித்து, நரம்புகளை வலுப்படுத்துகிறது. 

சோளம் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரித்து, இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது. கம்பில் ஆண்டிஆக்ஸிடென்டுகள் அதிகமாக இருப்பதால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பல நோய்களை தடுக்கிறது. வரகு செரிமான மண்டலத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுத்து, நன்மை பயக்கும் குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்துகிறது. 

பனிவரகு இதயம் மற்றும் நீரழிவு நோய்க்கு உகந்தது. சாமை எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகளை வலுபடுத்தி, பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளைத் தடுக்கிறது, கொள்ளு, கருப்பு கவுனி உள்ளிட்ட சிறுதானிய உணவுகளை உட்கொள்வதால் நமது உடலும் உள்ளமும் உறுதி பெறுவதோடு நமது பாரம்பரிய உணவுகளை மீட்டு எடுக்க துணை புரியும். எனவே அனைவரும் சிறுதானிய உணவுகளை உண்டு உடல் உறுதியுடன் பல்லாண்டு வாழ கேட்டுகொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவு வகைகளான ராகி புட்டு, ராகி இட்லி, மாப்பிளை சம்பா, தினை பொங்கல், தினை முறுக்கு, குதிரைவாலி, சாமை, கம்பு, வரகு, கேழ்வரகு, சோளம், ராகி தோசை, ராகி கொளுகட்டை, கருப்பு கொண்டை பயிறு, சிறுதானிய கொளுகட்டை, முருங்கை சூப் உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகளை பார்வையிட்டார்கள். மேலும் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் பயிலும் மாணவ மாணவிகள் சமைத்த உணவினை உண்டு, அவர்களை பாராட்டினார். 

இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, துணை இயயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.மீனாட்சி, இணை இயக்குநர் வேளாண்மை ஆல்பர்ட் ராபின்சன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.செந்தில் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, மண்டல தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர் கலா ராணி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory