» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் : அமைச்சர் செந்தில் பாலாஜி

செவ்வாய் 19, அக்டோபர் 2021 12:42:23 PM (IST)குமரி மாவட்டத்தில், கனமழையினால் பழுதடைந்த மின்மாற்றிகள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணியினை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழையின் காரணமாக சேதமடைந்த மின்மாற்றிகள் மற்றும் தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களை தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. 

குறிப்பாக முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பார்த்திபபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி கனமழையினால் பழுதடைந்ததை தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் மூலமாக போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதையும், பார்த்திபபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் பல்வேறு கோரிக்கைகளும் கேட்டறியப்பட்டதோடு, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்காடு ஆற்றுப்பாலத்தின் வழியாக செல்லும் தண்ணீரின் அளவு குறித்தும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, சிற்றாறு, கோதையாறு மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையின் காரணமாக, மேற்குறிப்பிட்ட அணைகளிலிருந்து உபரி நீர் அபரிதமாக வெளியேற்றப்பட்டதன் காரணமாக கால்வாய்களின் கரையோரப்பகுதிகளிலுள்ள 101 மின்மாற்றிகள் பாதுகாப்பு காரணங்களினால் மின் துண்டிப்பு செய்யப்பட்டன. மேலும், கடும் மழையினால் 23 மின்கம்பங்கள் பழுதடைந்ததோடு, 25 மின்கம்பங்கள் சாய்ந்தன. 14 மின்மாற்றிகள் பழுதடைந்தன.

குழித்துறை மின் பகிர்மானம் வட்டத்திற்குட்பட்ட மங்காடு, வைக்கல்லூர், பனைமுகம், கோட்டவிளை, நெடும்பறம்பு, விரிவிளை, பார்த்திவபுரம் பள்ளிக்கல், முஞ்சிறை வட்டார அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த 11 மின்மாற்றிகள் சரி செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த 12 மின்கம்பங்களில் 11 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. 25 சாய்ந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மின்துண்டிப்பு செய்யப்பட்ட 101 மின்மாற்றிகளில் 56 மின்மாற்றிகள் சரிசெய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் இருப்பதால் 45 மின்மாற்றிகள் சரிசெய்யும் பணி தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

தக்கலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் பழுதடைந்த 1 மின்மாற்றியும், 4 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட (பூதப்பாண்டி) 2 பழுதடைந்த மின்மாற்றிகளும், 7 மின்கம்பங்களும் சரிசெய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 3661 மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகத்தில் பாதுகாப்பு காரணம் கருதி தடைசெய்யப்பட்டது. அதில் 2000 மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் 1661 மின்நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் கொடுக்கப்பட வேண்டி இருக்கிறது. வெள்ளநீர் வடியவும், HT/LT லைன்களை ஆய்வு செய்த பின் ஒவ்வொரு மின்மாற்றியாக மின்சாரம் கொடுக்கப்படும்.

இந்த வெள்ள பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.78 இலட்சம் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தேவையான அனைத்து மின் தளவாட பொருட்களும் உடனடியாக மதுரை மற்றும் திருநெல்வேலியிருந்து வரவழைக்கப்பட்டு, துரித கதியில் பணிகளை முடிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. வெள்ளநீர் வடியும் பட்சத்தில் மீதமிருக்கும் 45 மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் உடனடியாக கொடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

ஆய்வின்போது, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், கிள்ளியுர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார், தமிழ்நாடு மின்பகிர்மானம் (சென்னை) எம்.சிவலிங்கராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ச.சா.தனபதி, முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.ராஜன், புஷ்பலீலா ஆல்பன், திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளர் .செல்வகுமார், கன்னியாகுமரி மாவட்ட மின்பகிர்மான மேற்பார்வை பொறியளாளர்.கு.குருவம்மாள், உதவி பொறியாளர் (குழித்துறை) பத்மகுமார், மாஸ்டர்.மோகன், ராஜன், ஜாண் பிரைட், ஜெயசேகர், காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தலைவர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory