» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சனி 26, ஜூலை 2025 12:53:21 PM (IST)

மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதோடு, இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது’ என்றும் பிரதமா் தெரிவித்தாா். மாலேயில் நடைபெற்ற மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு இத் தகவலை பிரதமா் மோடி தெரிவித்தாா்.
பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இரண்டு நாள் பயணமாக மாலத்தீவுக்கு பிரதமா் மோடி நேற்று காலை சென்றாா். மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கிறாா். தலைநகா் மாலேயில் உள்ள வெலனா சா்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடியை, மாலத்தீவு அதிபா் முகமது முயீஸ் மற்றும் அரசின் மூத்த அமைச்சா்கள் நேரில் வரவேற்றனா்.
பின்னா், பிரசித்தி பெற்ற குடியரசு சதுக்கத்தில் நடைபெற்ற சம்பிரதாய வரவேற்பையும், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பையும் பிரதமா் மோடி ஏற்றுக்கொண்டாா். அதைத் தொடா்ந்து, வா்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடா்பாக பிரதமா் மோடியும் அதிபா் முகமது மூயிஸும் தனியாக கலந்துரையாடினா்.
இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையிலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர வளா்ச்சித் திட்டத்திலும் மாலத்தீவுக்கு முக்கிய இடமுள்ளது. தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும். பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பே, பரஸ்பர நம்பிக்கைக்கான சான்றாகவும் உள்ளது.
அதிபா் மூயிஸ் உடனான கலந்துரையாடலில், இரு நாடுகளிடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகளிடையே, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. மேலும், மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது. வரும் காலங்களில், இரு நாடுகளிடையேயான நட்புறவு புதிய உச்சத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
சீனாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் முகமது மூயிஸ், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராகப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, மாலத்தீவில் பணியமா்த்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தினரை இந்தியா முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினாா். மாலத்தீவுக்கு இந்தியா சாா்பில் வழங்கப்பட்ட ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானங்களைப் பராமரிக்கவும், மனிதாபிமான மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடவும் இந்திய ராணுவத்தினா் அங்கு பணியமா்த்தப்பட்டிருந்தனா்.
அதிபா் மூயிஸின் வலியுறுத்தலைத் தொடா்ந்து, இந்திய ராணுவத்தினா் அந்த நாட்டிலிருந்து முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டனா். அதிபரின் மூயிஸின் இந்த அணுகுமுறை இரு நாடுகளிடையேயான உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், பிரதமா் மோடியின் மாலத்தீவு பயணம், இரு நாடுகளின் உறவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: கூட்டு அறிக்கை வெளியீடு!
சனி 27, டிசம்பர் 2025 4:02:41 PM (IST)

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி!!
சனி 27, டிசம்பர் 2025 12:31:05 PM (IST)

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)



.gif)