» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 404 பேர் பலி
புதன் 19, மார்ச் 2025 8:38:32 AM (IST)

போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் சரமாரியாக வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 404 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக தீராப்பகை நிலவி வருகிறது. இந்த சூழலில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 250 பேரை பணய கைதிகளாக பிடித்துச் காசா பகுதிக்கு இழுத்து சென்றனர்.
இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்த போரில் காசாவில் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனிடையே அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கடந்த ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டன. முதற்கட்டமாக 6 வாரங்களுக்கு போரை நிறுத்தி வைக்கவும், அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை தொடரவும் முடிவு செய்யப்பட்டது.
அதோடு முதற்கட்ட போர் நிறுத்த காலத்தில் 33 இஸ்ரேலிய பணய கைதிகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீன கைதிகளை பரஸ்பரம் விடுதலை செய்ய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன. அதன்படியே 6 வார காலத்தில் 25 பணய கைதிகளை உயிருடனும், 8 பேரை பிணமாக ஹமாஸ் ஒப்படைத்தது. அதேபோல இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் இருந்த 2 ஆயிரம் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தது. அதோடு முதற்கட்ட போர் நிறுத்தமும் முடிவுக்கு வந்தது.
முதற்கட்ட போர் நிறுத்தம் எந்த சச்சரவும் இன்றி சுமுகமாக சென்றதால் நிரந்த போர் நிறுத்தத்துக்கான முழு நம்பிக்கையுடன் அடுத்த கட்ட பேச்சவார்த்தைகள் தொடங்கின. கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் கத்தார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் பயண கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாசிடம் மத்தியஸ்தர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை ஹமாசும் ஏற்றுக்கொண்டது.
ஆனால் காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தினால் மட்டுமே பணய கைதிகளை விடுவிக்க முடியும் என ஹமாஸ் திடீரென அறிவித்தது. இது இஸ்ரேலுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காசாவில் தெற்கு பகுதியில் இஸ்ரேல் திடீர் வான்தாக்குதலை நடத்தியது. கான்யூனிஸ், ரபா உள்ளிட்ட நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கின.
அடுத்தடுத்து குண்டுகள் விழுந்து வெடித்ததில் பெரும் தீப்பிழம்புகளுடன் வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த தாக்குதலில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. ஜனவரி 19-ந்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 404 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் காசா மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் அவர் பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே காசாவின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்தும் இடம்பெயரும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் இஸ்ரேல் ராணுவம் அடுத்து காசாவின் கிழக்கு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியதற்கு ஹமாஸ் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம்: ஷபாஸ் ஷெரீப்
திங்கள் 10, நவம்பர் 2025 11:16:26 AM (IST)

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி - பாகிஸ்தானுடன் போருக்கு தயார்: தலீபான்கள் அறிவிப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 10:42:34 AM (IST)

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)

மோடி அழைப்பை ஏற்று அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்லவேன் : டிரம்ப் முடிவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:02:19 PM (IST)

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)


.gif)