» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி ‍- பாகிஸ்தானுடன் போருக்கு தயார்: தலீபான்கள் அறிவிப்பு!

திங்கள் 10, நவம்பர் 2025 10:42:34 AM (IST)

துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் உடன் போருக்கு தயார் என தலீபான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் தலீபான் அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.

இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் பயங்கரவாத முகாமை தாக்குவதாக கூறி பாக்டிகா மாகாணம் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது வான்தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இரு நாடுகளின் முக்கிய எல்லையான டோர்காம் நுழைவாயில் மூடப்பட்டது.

பின்னர் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலையீட்டால் போர் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டினர். எனவே அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தலீபான் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், பேச்சுவார்த்தை தோல்விக்கு பாகிஸ்தானே காரணம் எனவும், எந்தவொரு நாடும் தங்களது உள்விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாது எனவும் கூறினார்.

எனவே தங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் போருக்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான பதற்றம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory