» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்பு : பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுமா?

வெள்ளி 13, மே 2022 11:24:41 AM (IST)



இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச திங்கள் கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டது. இதனால் அங்கு அவசரநிலை நெருக்கடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவிற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்றைய தனது உரையில், "தற்போதைய சூழ்நிலையை கட்டுப்படுத்தவும் நாடு அராஜகத்தை நோக்கி செல்வதை தடுக்கவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறக்கூடிய, மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய அமைச்சரவையை நியமிப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ரணில்விக்ரமசிங்கே 6-வது முறையாக இலங்கை பிரதமராக வியாழக்கிழமை மாலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளை தனியாக தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அத்தியாவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இலங்கையர்கள் இருக்க வேண்டும். இலங்கை ரூபாவிற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று இருக்க வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்த அவர், திங்கட்கிழமை அளவிலேயே அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் எனவும் ரணில் குறிப்பிட்டார். 

ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக உள்ளார். இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்ற எஸ்ஜெபி கட்சி இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. அக்கட்சி, "ராஜபக்சேக்களின் குடும்பத்தை காப்பாற்றவே ரணில் விக்ரமசிங்கே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக" குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள் என்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கேவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ரணில் நியமன எம்பியாக இருந்து வந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory