» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமிக்கு 3 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை: கால்பந்து பயிற்சியாளர் போக்சோவில் கைது!

திங்கள் 15, ஜூன் 2026 4:25:49 PM (IST)

மும்பை அருகே 17 வயது சிறுமியைப் பயமுறுத்தி 3 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கால்பந்து பயிற்சி மையப் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியில் 37 வயது நபர் ஒருவர் தனியார் கால்பந்து பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, 17 வயது சிறுமி ஒருவர் இந்த மையத்தில் சேர்ந்து கால்பந்து பயிற்சி பெற்று வந்தார். அப்போது அந்தச் சிறுமியிடம், கால்பந்து விளையாட்டில் "பிரகாசமான எதிர்காலம் மற்றும் நல்ல வாய்ப்புகள்" இருப்பதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி, பயிற்சியாளர் சிறுமியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

சிறுமியின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்ட பயிற்சியாளர், அவரைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த அத்துமீறல்களைத் தனது மொபைல் போனில் வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் எடுத்து வைத்துள்ளார்.

பயிற்சியாளரின் தொடர் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, சமீபகாலமாக அவரிடமிருந்து விலகி, தொடர்பைத் துண்டிக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த பயிற்சியாளர், சிறுமியை மீண்டும் தனது வழிக்குக் கொண்டு வர, தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பொதுவெளியில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

பயிற்சியாளரின் தொடர்ச்சியான மிரட்டலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, இச்சம்பவம் குறித்துத் தனது குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக மணிக்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த மணிக்பூர் போலீசார், கடந்த சனிக்கிழமை அன்று அந்தப் கால்பந்து பயிற்சியாளரை அதிரடியாகக் கைது செய்தனர். கைதான நபர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் கற்பழிப்பு, குற்றவியல் மிரட்டல் மற்றும் போக்சோ (POCSO) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory