» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது 

இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30-ந்தேதி கடைசி தேதியாகும். ஆனால் நடப்பாண்டு, ஐ.டி.ஆர். படிவத்தில் சில மாற்றங்கள் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 15-ந்தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. வழக்கத்தை விட சம்பளதாரர்களுக்கு இந்த முறை 45 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

‘கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று வருமானவரித்துறை வலியுறுத்தி வந்தது. இந்தநிலையில், கடைசி நாளான நேற்று நள்ளிரவு வரை சம்பளத்தாரர்கள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்த வருமான வரித்துறை செப்டம்பர் 15-ந் தேதி தான் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள், இதற்கான தேதி எதையும் தற்போது வரை நீட்டிக்கவில்லை, போலி செய்திகளை கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம். உடனடியாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள்' என்று எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தந்திருந்தது.

வருமானவரி கணக்கு இன்று (நேற்று) தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். வருமான வரி சட்டப்பிரிவு 234 எப்-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம், ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டியிருந்தால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி சட்டப்பிரிவு 234ஏ-ன் கீழ், கடைசி தேதிக்குப் பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் வருமான வரி நிலுவைக்கு 1 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும். வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி கணக்கை வட்டி மற்றும் அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த காலக்கெடு அனைவருக்கும் பொருந்தாது.

தனிநபராக வரி செலுத்துவோர், தணிக்கை தேவையில்லாத இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த காலக்கெடு பொருந்தும். வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், நிதி சார்ந்த பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, ரீபண்ட் பெறுவதில் தாமதம், வரிச் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் போது ஏற்படும் இழப்புகளை சரி செய்வது உட்பட கேரி-பார்வர்டு உள்ளிட்ட பல சலுகைகளையும் இழக்க நேரிடும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்படுவதாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது மத்திய அரசு. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory