» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சமண மத விழாவில் ரூ.1 கோடி தங்கக்கலசம் திருட்டு: மதகுரு போல வந்து மர்ம ஆசாமி கைவரிசை!

ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:40:45 AM (IST)



டெல்லியில் சமண மத விழாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக்கலசத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

சமணர்கள் பல பண்டிகைகளை கொண்டாடினாலும், ‘தஸ்லக்சண‘ விழாவை சிறப்பாக நடத்துவார்கள். இது மனிதர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய 10 நற்பண்புகளை போதிக்கும் விழாவாகும். இந்த விழாவை டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவையொட்டி டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் வசிக்கும் பெரிய தொழில் அதிபர் சுதிர் ஜெயின் என்பவர் தனது வீட்டில் இருந்து தினமும் ஒரு தங்கக்கலசம் மற்றும் அதனோடு கூடிய வைரம், மாணிக்க, மரகத கற்கள் பதிக்கப்பட்ட தங்கப்பொருட்களை கொண்டு சென்று பூஜை முடிந்ததும் வீட்டுக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த 3-ந்தேதி அவர் இவ்வாறு எடுத்துச் சென்றிருந்தபோது, திடீரென அவை மேடையில் இருந்து மாயமாகி விட்டன. அங்கும், இங்கும் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. யாரோ அவற்றை திருடிச்சென்று விட்டனர்.

இதனால் போலீசில் புகார் செய்யப்பட்டது. திருட்டு போன தங்கக்கலசம் மற்றும் தங்கப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். இத்தனை விலைமதிப்புள்ள பொருட்கள் மாயமானதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது சமண மதகுரு போல வேடம் அணிந்திருந்த ஒருவர் அந்த பொருட்களை நைசாக திருடி பையில் அள்ளிப்போட்டு கொண்டு செல்வது தெரியவந்தது. அவர் யார்? என தெரியவில்லை. அவரது அங்க அடையாளங்களைக் கொண்டு போலீசார் அவரை தேடி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory