» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டம்? டெல்லியில் அமித்ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு!

சனி 6, செப்டம்பர் 2025 10:39:14 AM (IST)



டெல்லியில் மத்திய அமைச்சர்  அமித்ஷாவை நடிகர் சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார். 

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட உள்ளன.

இதேபோன்று, நாம் தமிழர், த.வெ.க. ஆகிய இரு கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதனால், இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தி.மு.க. சார்பாக, ஓரணியில் தமிழகம் என்ற முழக்கத்துடன் மக்களை நேரிடையாக சந்தித்து, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. சார்பாக, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கட்சியின் முன்னிலை, கள நிலவரம், அரசியல் பணிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டணி ஒருங்கிணைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நடிகர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகியான சரத்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சரத்குமாருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், அவருக்கு இதுவரை பொறுப்பு வழங்கப்படவில்லை.

இந்த சூழலில் மத்திய மந்திரி அமித்ஷாவை டெல்லியில் தனது ஆதரவாளருடன் சென்று சரத்குமார் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட சரத்குமார் திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory