» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு: 34 கார்களில் மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்?

வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:44:05 PM (IST)

மும்பை நகரில் பல வாகனங்களில் 34 மனித குண்டுகள் ஊடுறுவி இருப்பதாக போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் நகரம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மும்பையில் 2008ம் ஆண்டு ஊடுருவிய 10 தீவிரவாதிகள் நகரின் பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 160+ மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தியாவில் நடந்த மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இதற்கிடையே மும்பை நகரில் பல வாகனங்களில் 34 மனித குண்டுகள் ஊடுறுவி இருப்பதாக போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. அதில் வாகனங்களில் 34 மனித வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த மும்பையும் அதிரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மெசேஜ்ஜை அனுப்பியவர்கள் தங்களை "லஷ்கர்-இ-ஜிஹாதி" என்று கூறிக் கொண்டுள்ளனர்.

இதற்காக 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதனால் ஒரு கோடி பேர் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த மிரட்டல் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த மெசேஜ் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மெசேஜ்ஜை அனுப்பியது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மூத்த மும்பை காவல்துறை அதிகாரி கூறுகையில், "இது ஒரு வெறும் வதந்தி போல் தோன்றினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க நமது பாதுகாப்புப் படையினர் தயாராக இருக்கிறது. நாங்கள் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். பார்கிங், பேஸ்மெண்ட் என அனைத்து இடங்களிலும் சோதனை செய்து வருகிறோம். ஒரு இடத்தையும் விடாமல் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளோம்" என்றார். அதேநேரம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் தான் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அங்கு மொத்தம் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். நாளை தான் விநாயகர் சிலைகளை அங்கு ஆற்றில் கரைப்பார்கள்.. இந்த விழாவுக்காகப் பல ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 12 கூடுதல் காவல் ஆணையர்கள், 40 துணை ஆணையர்கள், 61 உதவி ஆணையர்கள், 3,000 அதிகாரிகள் மற்றும் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மறுபுறம் மகாராஷ்டிராவில் சமீப காலங்களாகவே இதுபோல தீவிரவாத மிரட்டல் வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தானே ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். இருப்பினும், விசாரணையில் அது போலி வெடிகுண்டு மிரட்டல் என தெரிய வந்தது. இது தொடர்பாக 43 வயதான ஒருவரையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory