» சினிமா » செய்திகள்

அரசன் படப்பிடிப்புத் தளத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் திடீர் வருகை!

புதன் 26, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

Arasaniruthsimbu.jpg

நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் திடீரென வருகை தந்து படக்குழுவினருக்கு வியப்பளித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் 'அரசன்'. கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு, டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கியது. இடையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் திடீரென வருகை தந்த காணொலி ஒன்றை, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காணொலியில், படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழையும் மகிழ்வுந்தில் (கார்) இருந்து அனிருத் இறங்குகிறார். அவரைப் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்கின்றனர்.

பின்னர் வெற்றிமாறனும் அனிருத்தும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும்போது, படத்தின் கதாநாயகன் சிலம்பரசனும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் அதில் கலந்துகொள்கின்றனர்.

மேலும், "அரசன் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகை தந்த இசையமைப்பாளர் அனிருத். சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் உற்சாகத்துடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது" என்றும் தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார்.

வடசென்னை பின்னணியில் 'அரசன்':

வெற்றிமாறனின் 'வடசென்னை' திரைப்படத் தொடர்ச்சியாக (Cinematic Universe) உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிலம்பரசன் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார்.

இப்படத்தில் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory