» சினிமா » செய்திகள்

விஜய் வீட்டில் ஐடி சோதனைக்கு மதமாற்றம் தான் காரணமா? விஜய் சேதுபதி கருத்து

புதன் 12, பிப்ரவரி 2020 4:27:53 PM (IST)

நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளுக்கு கிறிஸ்தவ மதமாற்றம் தான் காரணம் என்ற கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துவரும் நடிகர் விஜய், வருமான வரித் துறை சோதனைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். 23 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததன் உண்மைப் பின்னணி என்ற தலைப்பில் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. அதில், ஜேப்பியாரின் மகள் ரெஜினா, தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளார். 

சில கிறிஸ்தவ மத குருக்களின் உதவியுடன் ஒரு மாயவலை உருவாக்கப்பட்டு விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மற்றும் சில பிரபலங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். இதற்கான விழா சமீபத்தில் வடபழனியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்வாறு மதமாறிய நடிகர்களுக்கு, பிற திரை நடிகர்கள், திரைத்துறையில் வேலை செய்யும் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் இதர தொழிலாளர்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் விதமாக பிரச்சாரம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோடி மற்றும் அமித்ஷாவால் பல தடைகள் கொண்டுவரப்பட்டும், இதற்கான நிதி உதவி சில என்.ஜி.ஓ-க்களில் இருந்து வருகிறது. 

மேலும் இந்தப் பணப்பரிமாற்றத்திற்கு சில கல்வி நிலையங்கள் வாகனம் போல செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் தயாரிப்புக்குத் தேவைப்பட்ட மொத்த பணமும் ரெஜினாவால் வழங்கப்பட்டது. ஆனால் அந்த உண்மையை மறைக்கும் விதமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டது. பிகில் படத்தின் முழு வியாபாரமும் முடிவடைந்த பின்னர் விஜய், தயாரிப்பு நிறுவனம், அன்புச் செழியன் ஆகியோர் இணைந்து பணத்தை ரெஜினாவிற்கு அனுப்பி உள்ளனர். இவை அனைத்தையும் வருமான வரி துறை கடந்த ஒரு வருடமாக கூர்மையாகக் கவனித்து வருகிறது. 

பிகில் படம் ரிலீசானபோது இந்த தகவல் அனைத்தும் உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் பிகில் ரிலீசுடன் தொடர்புடைய கல்வி நிலையங்களான ஜேப்பியார் டிரஸ்ட், எஸ்.ஆர்.எம், லயோலா கல்லூரி டிரஸ்ட் மற்றும் பிற கிறிஸ்தவ கல்வி நிலையங்களிலும், சமீபத்தில் மதம் மாறிய பிற நடிகர்கள் வீட்டிலும் வருமான வரி துறை சோதனை நடத்தத் திட்டமிட்டது. வரும் நாட்களில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது” என்பதாக அந்த தகவல் இருந்தது. அதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...” என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory