» சினிமா » செய்திகள்

தளபதி 63 படத்தின் பெயர், போஸ்டர்கள் வெளியீடு: விஜய் ரசிகர்கள் உற்சாகம்

சனி 22, ஜூன் 2019 11:43:23 AM (IST)விஜய் இரட்டை வேட தோற்றத்தில் நடித்துள்ள 63-வது படமான பிகில் திரைப்படத்தின் பெயர் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு பிகில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். சர்கார் படத்துக்கு பிறகு, அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வெளியாகின. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், வசூலையும் குவித்தன.

மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ரெபா மானிகா, ஆனந்தராஜ், தேவதர்ஷினி ஆகியோரும் உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்க்கு 63-வது படம் ஆகும். இந்த படத்தில் அவர், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே தளபதி 63 என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். வெறித்தனம், மைக்கேல் உள்ளிட்ட சில பெயர்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் தலைப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

முந்தைய படங்களான தெறி, மெர்சல், சர்கார் பட தலைப்புகளும் அவருடைய பிறந்தநாளிலேயே வெளிவந்தன. அதுபோல், விஜய்யின் 63-வது படத்தின் தலைப்பையும், அவருடைய பிறந்தநாளையொட்டி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய்யின் 63-வது படத்துக்கு பிகில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிகில் என்றால் விசில் என்றும் அர்த்தம் உண்டு. படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில்  இரு வேடங்களில் விஜய் இருக்கிறார். இதன் மூலம் அவர் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

கால்பந்தாட்ட வீரர் சீருடையில் மகன் விஜய் உள்ளார். தந்தை விஜய், வேட்டி-சட்டையில் நாற்காலி ஒன்றில் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறார். அவருக்கு முன்னால் மீன் வெட்டும் பெரிய கத்தி உள்ளது. மீன் சந்தையில் இருவரும் இருப்பது போல் இந்த தோற்றம் அமைந்துள்ளது. பிகில் தலைப்பையும், விஜய் தோற்றத்தையும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று, ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். இணையதளங்களிலும் படத்தின் முதல் தோற்றம் வைரலாகியது.இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். தற்போது இந்த இரண்டு தோற்றங்களையும் ரசிகர்கள் டிரண்ட் ஆக்கி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory