» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

புதன் 7, பிப்ரவரி 2024 10:02:21 AM (IST)



ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான அரைஇறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெனோனியில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் உதய் சாஹரன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் லுவான் டிரே பிரிட்டோரியஸ் (76 ரன்), ரிச்சர்ட் செலட்ஸ்வானே (64 ரன்) அரைசதம் அடித்தனர். இந்திய தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், முஷீர் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 245 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஆதர்ஷ் சிங் (0), முஷீர் கான் (4 ரன்) உள்பட 4 முன்னணி விக்கெட்டுகளை 32 ரன்னுக்குள் பறிகொடுத்து தள்ளாடியது. இக்கட்டான சூழலில் 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் உதய் சாஹரனும், சச்சின் தாசும் கைகோர்த்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பிரமாதமாக ஆடிய இந்த ஜோடி முக்கியமான கட்டத்தில் பிரிந்தது. ஸ்கோர் 203 ரன்களை எட்டிய போது சச்சின் தாஸ் (96 ரன், 95 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மபகாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் திரட்டினர். இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான்.

அடுத்து இறங்கிய அவனிஷ் (10), முருகன் அபிஷேக் (0) அடுத்தடுத்து வீழ்ந்ததால் மீண்டும் நெருக்கடி உருவானது. நல்லவேளையாக 9-வது வரிசையில் களம் புகுந்த ராஜ் லிம்பானி சில ஷாட்டுகளை அடித்து பதற்றத்தை தணித்தார். வெற்றிக்கு ஒரு ரன் தேவையாக இருந்த போது, கேப்டன் சாஹரன் (81 ரன், 124 பந்து, 6 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். இறுதியில் லிம்பானி பந்தை பவுண்டரிக்கு விரட்டி தித்திப்பாக முடித்து வைத்தார். இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியோடு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 

லிம்பானி 13 ரன்னுடன் களத்தில் இருந்தார். 23 வைடு உள்பட 27 ரன்கள் எக்ஸ்டிரா வகையில் கிடைத்தது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. 5 முறை சாம்பியனான இந்திய அணி 9-வது முறையாக இறுதி சுற்றை எட்டியிருக்கிறது. மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியோடு இந்தியா 11-ந்தேதி இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory