» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்: ஆப்கான் அணியை வீழ்த்தியது இந்தியா…!

வியாழன் 18, ஜனவரி 2024 11:12:16 AM (IST)



பெங்களூருவில் நடைபெற்ற பரபரப்பான 3வது டி-20 போட்டியில் ஆப்கான் அணியை இந்தியா வீழ்த்தியது. 

ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ஜிதேஷ், அக்சர், அர்ஷ்தீப் ஆகியோருக்கு பதிலாக சாம்சன், குல்தீப், ஆவேஷ் கான் இடம் பெற்றனர். ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். 

ஜெய்ஸ்வால் 4 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கோஹ்லி சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். ஷிவம் துபே 1 ரன்னில் நடையை கட்ட, சஞ்சு சாம்சனும் முதல் பந்தில் முட்டை போட்டார்.

இந்தியா 4.3 ஓவரில் 22 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ரோகித் – ரிங்கு சிங் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ரிங்கு பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ரோகித் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். முதல் 2 போட்டியிலும் டக் அவுட்டாகி இருந்த அவர், அதற்கு வட்டியும் முதலுமாக பெங்களூருவில் ருத்ரதாண்டவம் ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆப்கான் பவுலர்கள் விழி பிதுங்கினர்.

பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ரோகித் 64 பந்தில் சதம் அடிக்க, மறுமுனையில் ரிங்கு 36 பந்தில் அரை சதம் விளாசினார். கரிம் ஜனத் வீசிய கடைசி ஓவரை ரிங்கு ஹாட்ரிக் சிக்சருடன் முடித்துவைக்க, இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது. ரோகித் 121 ரன் (69 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்), ரிங்கு 69 ரன்னுடன் (39 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கான் பந்துவீச்சில் பரீத் அகமது 3, அஸ்மதுல்லா 1 விக்கெட் வீழ்த்தினர். 

பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 212 ரன்கள் எடுத்து டிராவில் முடிந்தது. இதன்காரணமாக சூப்பர் ஓவர் சுற்று நடத்தப்பட்டது. முதல் சூப்பர் ஓவர் சுற்றில் இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்ததால் டிராவில் முடிந்தது. பின்னர் இரண்டாவது சூப்பர் ஓவர் சுற்றில் ஆப்கான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory