» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹாரி புரூக், வோக்ஸ் அசத்தல்: ஆஷஸ் 3-வது டெஸ்ட்டில் ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து

திங்கள் 10, ஜூலை 2023 12:27:37 PM (IST)



ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹெட்டிங்லியில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களும், இங்கிலாந்து 237 ரன்களும் எடுத்தன. 26 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தில் 67.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 112 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் சேர்த்தார்.

251 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 9, பென் டக்கெட் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. பென் டக்கெட் 23 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய மொயின் அலி 5 ரன்களில் போல்டானார். நிதானமாக விளையாடிய ஸாக் கிராவ்லி 55 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜோ ரூட் 21, பென் ஸ்டோக்ஸ் 13, ஜானி பேர்ஸ்டோ 5 ரன்களில் நடையை கட்டினர். 171 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் ஹாரி புரூக், கிறிஸ் வோக்ஸ் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

தனது 5-வது அரை சதத்தை அடித்த ஹாரி புரூக் 93 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்பந்தை மிட் ஆஃப் திசையில் தூக்கி அடித்தபோது பாட் கம்மின்ஸிடம் கேட்ச் ஆனது. 7-வது விக்கெட்டுக்கு கிறிஸ்வோக்ஸுடன் இணைந்து ஹாரிபுரூக் 59 ரன்கள் சேர்த்திருந்தார். அந்த நேரத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது.

இதையடுத்து களமிறங்கிய மார்க்வுட் 8 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 16 ரன்கள் விளாச இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ் 47 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரைஉயிர்ப்பிப்புடன் வைத்துள்ளது. முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டிருந்தது. 4-வது போட்டி வரும் 19-ம் தேதி மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory