» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!

புதன் 28, ஜூன் 2023 10:02:33 AM (IST)

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆமதாபாத்தில் அக்டோபர் 5-ந்தேதி தொடங்குகிறது. போட்டித் தொடருக்கான முழு அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 அணிகள் பங்கேற்கும் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. ஜிம்பாப்வேயில் நடந்து வரும் தகுதி சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் எஞ்சிய 2 அணிகளாக உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும்.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

நவம்பர் 19-ந் தேதி வரை 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 45 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.

அரைஇறுதிப்போட்டிகள் முறையே நவம்பர் 15, 16-ந் தேதிகளில் மும்பை வான்கடே, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானங்களிலும், இறுதிப்போட்டி (நவ.19) ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானங்களில் ஒன்றான நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது.

இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றால் முதலாவது அரைஇறுதி மும்பையில் நடைபெறும் என்றும், அரைஇறுதியில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் ஆடும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் (ரிசர்வ் டே) நடைபெறும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்தியா - பாகிஸ்தான் மோதல்

இந்த போட்டி தொடரில் 6 பகல் ஆட்டங்கள் நடக்கிறது. அவை காலை 10.30 மணிக்கு தொடங்கும். மற்றவை அனைத்தும் பகல்-இரவு ஆட்டங்களாகும். அந்த ஆட்டங்கள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

போட்டியை நடத்தும் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் மோதுகிறது. இந்திய அணி தனது லீக் ஆட்டங்களை 9 நகரங்களில் ஆடுகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி தனது லீக் ஆட்டங்களை 8 இடங்களில் விளையாடுகிறது.

பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம், 1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட ஆமதாபாத் ஸ்டேடியத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடக்க உள்ளது.

பயிற்சி ஆட்டங்கள்

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் ஐதராபாத், திருவனந்தபுரம், கவுகாத்தியில் செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை நடக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்துவது இது 4-வது முறையாகும். முன்னதாக 1987, 1996, 2011-ம் ஆண்டுகளில் ஆசிய நாடுகளுடன் இணைந்து இந்த போட்டியை நடத்தி இருந்தது. தற்போது முதல்முறையாக தனியாக இந்த போட்டியை நடத்துகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory