» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் பதக்கம் : தமிழகத்தின் பவானி தேவி சாதனை!

செவ்வாய் 20, ஜூன் 2023 10:40:01 AM (IST)

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் பவானி தேவி.

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான சேபர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் சி.ஏ.பவானி தேவி, உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவுடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய பவானி தேவி 14-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். 

அரை இறுதியில் தோல்வி அடைந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஆசியவாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் பவானி தேவி.

முன்னதாக நடைபெற்ற கால் இறுதிசுற்றில் பவானி தேவி 15-10 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை தோற்கடித்து அனைவரது பார்வையையும் தன் மீது குவித்திருந்தார். மிசாகிஎமுரா கடந்த 2022-ம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் நடைவெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மிசாகிக்கு எதிராக பவானி பெற்ற முதல் வெற்றி இதுவாகும், ஏனெனில் அவர் கடந்த காலங்களில் அவருக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தார்.

பவானி தேவியின் வரலாற்று சாதனைக்கு இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "இந்திய வாள்வீச்சுக்கு இது மிகவும் பெருமையான நாள். இதுவரை யாராலும் சாதிக்க முடியாததை பவானி தேவி சாதித்துள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வாள்வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பவானி தேவி, அரையிறுதியில் தோற்றாலும், போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது. ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருந்தது. அதனால் இது ஒரு பெரிய அளவிலான முன்னேற்றம். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory