» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலி அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு!!

வெள்ளி 19, மே 2023 12:00:43 PM (IST)



கோலி அதிரடி சதத்தால் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்றிரவு, ஐபிஎல் 65வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளஸ்சிஸ், பந்து வீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் ஷர்மா-ராகுல் த்ரிப்பாட்டி களமிறங்கினர். பவர்பிளே ஓவரில் நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய துவக்க ஜோடி, மிச்சல் பிரேஸ்வெல் வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து, அபிஷேக் 11, த்ரிப்பாட்டி 15 ரன்களில் அவுட்டாகினர்.

3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஏய்டன் மார்க்ரம்-ஹென்ரிக் க்ளாஸன் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவுண்டரியும், சிக்சருமாக க்ளாஸன் விளாசினார். ஒருமுனையில் க்ளாஸன் அரைசதம் விளாசியநிலையில், 13வது ஓவரில் ஷாபாஸ் சுழலில் மார்க்ரம் 18 ரன்னில் போல்டாகி வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்களூரு பந்துவீச்சை புரட்டியெடுக்க ரன்கள் அதிகரித்தது. 19வது ஓவர் வீசிய ஹர்சல்பட்டேல் பந்தில் க்ளாஸன், சிக்சர் அடித்து சதம் விளாசினார். அதேஓவரில் 5வது பந்தில் க்ளாஸன் 104 ரன்னில் (51 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) போல்டாகி வெளியேறினார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் குவித்தது.

ப்ரூக் ஆட்டமிழக்காமல் 27 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆர்சிபி தரப்பில் மிச்சல் பிரேஸ்வெல் 2, ஷர்பாஸ் அகமது, ஹர்சல்பட்டேல், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 187 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் வீராட் கோலி-டூ பிளஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன் குவித்தனர். கோலி சதம் (63 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து அவுட்டானார். டூ பிளஸ்சிஸ் 71 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரில் 4 பந்து மீதமிருக்க 187 ரன் இலக்கை எட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14 புள்ளிகளுடன் பிளேஆப் சுற்று வாய்ப்பை பெங்களூரு தக்க வைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory