» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிர் அணி விலகல்!

திங்கள் 24, ஜனவரி 2022 3:35:59 PM (IST)



வீராங்கனைகள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய மகளிர் அணி விலகியுள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏஎஃப்சி) நடத்தும் மகளிருக்கான 20-ஆவது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. கடந்த 1979-ம் ஆண்டு முதல் முறையாக இப்போட்டியை நடத்திய இந்தியா, தற்போது 2-வது முறையாக அதை ஒருங்கிணைக்கிறது. இப்போட்டியில் இதுவரை 8 முறை பங்கேற்ற நிலையில் கடந்த 1979 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் 2-ம் இடங்களைப் பிடித்ததே இந்தியாவின் அதிகபட்சமாகும். 

இதுதவிர 1981-இல் 3-ம் இடமும் பிடித்திருக்கிறது. அதிகபட்சமாக சீனாவே 7 முறை இதில் சாம்பியன் ஆகியிருக்கிறது. அதுவும் தொடா்ந்து 7 முறை கோப்பை வென்று சாதனை படைத்திருக்கிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, சீனா, சீன தைபே, ஈரான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தனது முதல் ஆட்டத்தில் ஈரானுடன் கோலின்றி சமன் செய்தது இந்தியா. நேற்று, சீன தைபே அணிக்கு எதிராக விளையாடவிருந்தது.

இந்நிலையில் போட்டியில் விளையாடக்கூடிய எண்ணிக்கையில் வீராங்கனைகள் கைவசம் இல்லாததால் போட்டியிலிருந்து விலகியுள்ளது இந்திய அணி. பல இந்திய வீராங்கனைகள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இரு வீராங்கனைகளுக்குக் காயமும் ஏற்பட்டுள்ளது. விதிமுறைப்படி ஆட்டத்தில் பங்கேற்க 13 வீராங்கனைகள் இருக்கவேண்டும். ஆனால் 23 பேர் கொண்ட இந்திய அணியில் 11 பேர் மட்டுமே நல்ல உடற்தகுதியுடன் இருந்ததால் சீன தைபேவுடன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய அணி எதிர்பாராத விதத்தில் போட்டியிலிருந்து விலகியுள்ளது. 

இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணியின் மூன்று ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. ஆசிய கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணிகள் 2023-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும். இதனால் உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும் இந்திய மகளிர் அணி இழந்துள்ளது. இத்தகவலால் இந்தியக் கால்பந்து வீராங்கனைகளும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory