» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் இன்னிங்ஸில் நியூசி. 249 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

புதன் 23, ஜூன் 2021 10:08:07 AM (IST)


இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாம் நாளன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் ஆட்டமான நேற்று நியூஸிலாந்து அணி 101 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் என்கிற நிலையிலிருந்து ஆட்டத்தைத் தொடர்ந்தது. களமும், சிறப்பான பந்துவீச்சும் நியூஸி. பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தியது. நிதானமாக ரன் சேர்ப்பில் ஈடுபட்ட நியூஸி. பேட்ஸ்மேன்களை ஷமியின் பந்துவீச்சு திணறடித்தது. உணவு இடைவேளைக்கு முன்பு ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்த நியூஸி. அணி 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்பு சில ஓவர்கள் வில்லியம்ஸனும், க்ராண்ட் ஹோமும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். க்ராண்ட் ஹோம் 13 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ஜேமிஸன் விரைவாக ரன் சேர்க்க முற்பட்டார். 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்தில் வீழ்ந்தார்.

கேப்டன் கேன் வில்லியம்ஸன் அரை சதத்தை நெருங்க, இஷாந்த் சர்மா வீசிய பந்து பேட்டின் எட்ஜில் பட்டு ஸ்லிப்பில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலியின் கைகளில் தஞ்சமடைந்தது. 49 ரன்களுக்கு வில்லியம்ஸன் பெவிலியன் திரும்பினார். ஆனால், இந்தக் கட்டத்தில் நியூஸி. அணி இந்திய அணியை விட 4 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

நீல் வேக்னர் ரன் ஏதும் சேர்க்காமல் அஸ்வினின் சுழலில் சிக்கினார். அதிரடியாக ஆட முற்பட்ட டிம் சவுத்தி 46 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் நியூஸி. அணி 249 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றது.  பின்னர் தனது 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 12 ரன்களுடனும், கோலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே முதல் நாள் ஆட்டமும், 4ம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது இதனால் இந்த போட்டி சமனில் முடிய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. . 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory