» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய மண்ணில் அதிக விக்கெட்: ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஸ்வின்

திங்கள் 15, பிப்ரவரி 2021 8:33:10 AM (IST)டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் 268 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்பஜன் சிங்கை முந்தினார், அஸ்வின்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த 34 வயது ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை சாய்த்த போது டெஸ்ட் போட்டியில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங்கை (265 விக்கெட்டுகள்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினார். உள்நாட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 350 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 76-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் அஸ்வின் இதுவரை 391 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதில் இந்திய மண்ணில் 268 விக்கெட்டுகள் சாய்த்ததும் அடங்கும்.

டெஸ்ட் போட்டியில் நேற்று அஸ்வின் ஒரு இன்னிங்சில் 29-வது முறையாக 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் அவர் டெஸ்டில் அதிக முறை 5 மற்றும் அதற்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்துடன் இணைந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 200 இடக்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற சிறப்பை தனதாக்கினார்.

இங்கிலாந்து புதிய சாதனை 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியினர் 329 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். ஆனால் அவர்கள் அந்த இன்னிங்சில் வைடு, நோ-பால், லெக் பை, பைஸ் உள்ளிட்ட எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன்னை கூட தாரை வார்க்காமல் புதிய சாதனை படைத்தனர். இதற்கு முன்பு இந்த வகையில் 1955-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர்கள் 328 ரன்கள் கொடுத்து எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் கூட வழங்காததே சாதனையாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory