» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாண்டியா-ஜடேஜா அசத்தல்: ஆஸிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

புதன் 2, டிசம்பர் 2020 5:25:42 PM (IST)


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கான்பெராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றார்கள். இதன்மூலம் தமிழக வீரரான நடராஜன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களைக் குவித்தது. 

பாண்டியாவும் ஜடேஜாவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் நிதானமாக ரன்கள் எடுத்த இருவரும் கடைசி 5 ஓவர்களில் தங்களுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 பந்துகளில் இருவரும் 150 ரன்கள் சேர்த்துள்ளார்கள். பாண்டியா 76 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்களும் ஜடேஜா 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் தொடக்க வீரர் லபுசானேவின் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். இது அவருடைய முதல் சர்வதேச விக்கெட்டாகும். லபுசானே 7 ரன்கள் மட்டும் எடுத்தார். இதன்பிறகு கடந்த இரு ஒருநாள் ஆட்டங்களிலும் 62 பந்துகளில் சதமடித்த ஸ்மித், 7 ரன்களிலும் ஹென்ரிகஸ் 22 ரன்களிலும் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். நன்கு விளையாடி வந்த கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், 82 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஆல்ரவுண்டரான கிரீன் 21 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும் கேரியும் இந்திய அணியை அச்சுறுத்தினார்கள். விரைவாக ரன்கள் எடுத்தார்கள். எனினும் கேரி 38 ரன்கள் ரன் அவுட் ஆனார். 

மேக்ஸ்வெல்லுக்கு ஒருநாள் தொடர் அற்புதமாக அமைந்துள்ளது. இன்றும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸி. ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிய தடையாக இருந்த மேக்ஸ்வெல், பும்ரா பந்துவீச்சில் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நன்கு பந்துவீசிய நடராஜன், அகரை 28 ரன்களில் வெளியேற்றினார். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன். அபாட், ஸாம்பா தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், நடராஜன், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் குல்தீப், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். 3-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 13 ரன்களில் வென்ற நிலையில் ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. அடுத்ததாக டி20 தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. 

பாண்டியா-ஜடேஜா இணை சாதனைதொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, ஆறாவது விக்கெட்டிற்கு இணைந்த ஹர்திக் பாண்டியா-ஜடேஜா இணை தூக்கி நிறுத்தியது. இந்த இணை 108 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் குவித்தது.  இது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 -ஆவது விக்கெட்டிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்பு, 1999 -ஆம் ஆண்டு ராபின் சிங் மற்றும் சதகோபன் ரமேஷ் இணை எடுத்த 123 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இதன்மூலம், 21 வருடச் சாதனையானது ஹர்திக் பாண்டியா-ஜடேஜா இணையால் முறியடிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory