» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது இந்திய அணி: 2வது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி

சனி 8, பிப்ரவரி 2020 5:10:18 PM (IST)ஆக்லாந்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அத்துடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா நியூசிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்து அணியை பேட் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் கப்தில் அதிரடி காட்டினார். அவர் 8 போர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

பின்னர் நிக்கோல்ஸ்சும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ராஸ் டெய்லரை தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை. ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 250 ரன்களை தாண்டுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஸ் டெய்லரின் அதிரடியால் நியூசிலாந்து அணி 50 ஒவர்களில் 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகள், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் அகர்வால் ஆகியோர் சொற்ப ரன்களில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 15 ரன்களில் நடையை கட்டினார். டி20 போட்டிகளில் ஜொலித்த கே.எல் ராகுல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார். கேதார் ஜாதவும் சோப்பிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் வந்த பவுலர்களான சர்தூல் தாகூர், நவ்தீப் சைனி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சைனி 45 ரன்கள் விளாசினர். மறுமுனையில் ஜடேஜா வெற்றிக்கு போராடினார். 

ஆனால் நியூசிலாந்து அணியினரின் நேர்த்தியான பந்துவீச்சினால் விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில்  சவுத்தீ, காலின் டி கிராண்ட்ரோம்,  பென்னெட், ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.  இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 55 ரன்களும், ஷ்ரேயஸ் அய்யர் 52 ரன்களும் எடுத்தனர்.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நியூசிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை தன்வசமாக்கியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory