» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலி -ஜடேஜா அபாரம் - வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

ஞாயிறு 22, டிசம்பர் 2019 10:33:24 PM (IST)மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. 316 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் நல்ல தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுலும் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, இந்திய அணி பின்னடைவைச் சந்தித்தது. நடுவரிசை பேட்ஸ்மேன்களான ஷ்ரேயஸ் ஐயர் 7, ரிஷப் பந்த் 7, கேதார் ஜாதவ் 9 என அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்தனர். இதனால், இந்திய அணி 228 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்த இந்தியக் கேப்டனுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா இணைந்தார். கோலியும், ஜடேஜாவும் நல்ல வேகத்தில் ரன் குவிக்க வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் ஓரளவு இந்திய அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால், இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 37 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து விளையாடி வந்தது. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைபட்டது. ஆனால், அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாகுர் சரவெடியாய் வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடிக்க இந்திய அணியின் வெற்றி மிகவும் எளிதானது.  இதன்மூலம், 48.4 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 31 பந்துகளில் 39 ரன்களும், ஷர்துல் தாகுர் 6 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர்.மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும், காட்ரெல், ஹோல்டர் மற்றும் ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory