» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹோப், ஹெத்மயர் சதம்: இந்தியாவை எளிதாக வென்றது வெஸ்ட் இன்டீஸ்!

திங்கள் 16, டிசம்பர் 2019 11:23:35 AM (IST)இந்தியாவுடனான முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பகலிரவு போட்டியாக நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் கேப்டன் போலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 70 ரன்களும், ரிஷப் பந்த் 71 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 288 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் அம்ப்ரிஸ் 9 ரன்களுக்கு சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷை ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ஹெத்மயர் இந்திய அணியின் பந்துவீச்சைப் பதம் பார்த்தார். ஹெத்மயர் அதிரடியாக ரன் குவித்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியளிக்காதவாறு விளையாடினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்து ஹோப் மறுமுனையில் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடினார். இதன்மூலம், ஹெத்மயர் 85 பந்துகளில் சதம் அடித்தார். சதம் அடித்தும் அதிரடியாக விளையாடி வந்த அவர் 139 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ஹோப்புடன் இணைந்த நிகோலஸ் பூரானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹெத்மயர் விக்கெட்டுக்குப் பிறகு ஓரளவு துரிதமாக விளையாடிய ஹோப்பும் சதம் அடித்தார். இதையடுத்து, 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த வெஸ்ட் இன்டீஸ் 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹோப் 102 ரன்கள் எடுத்தார். பூரான் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை ஹெத்மயர் தட்டிச் சென்றார். இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory