» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுபோதையில் தாயைத் தாக்கிய மகனை எரித்துக் கொன்ற தந்தை: தூத்துக்குடியில் பயங்கரம்!

புதன் 1, ஜூலை 2026 8:40:08 AM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் தாய் மற்றும் தங்கையைத் தாக்கி, குழந்தையைக் கொல்லப் போவதாக மிரட்டிய மகனை, பெற்ற தந்தையே தின்னர் ஊற்றித் தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். இதுதொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு கயத்தாறில் உள்ள மறுவாழ்வு மையத்தில் மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அவர், சில காலம் நன்றாக இருந்துவிட்டு மீண்டும் குடிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 30) இரவு அருள்ராஜ் கடும் போதையில் வீட்டிற்கு வந்து தனது தாயாரைத் தாக்கியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் கைகளில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும், சுரண்டையிலிருந்து தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் தாய் வீட்டிற்கு வந்திருந்த தனது தங்கையையும் மிரட்டி, அவரது குழந்தையைக் கொன்றுவிடுவதாகப் பிரச்சனை செய்துள்ளார். இதனைத் தட்டிப்போட்ட தந்தை தளமுத்துவையும் (60) அருள்ராஜ் தாக்கியுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் பயந்து வீட்டைப் பூட்டிக்கொண்ட நிலையில், அருள்ராஜ் வீட்டின் வாசல் அருகே தூங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை தளமுத்து, வீட்டில் பெயிண்டிங் வேலைக்காக வைத்திருந்த தின்னர் திரவத்தை, தூங்கிக் கொண்டிருந்த அருள்ராஜ் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகிய அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன், உதவி ஆய்வாளர் காவுராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த அருள்ராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், மகனைக் கொன்ற தந்தை தளமுத்துவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory