» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகத் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்!
வெள்ளி 29, மே 2026 8:32:15 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நாளை (மே 30) சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக கடந்த மே 21ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளுதல், மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தங்க ரதத்தில் கிரிவீதியுலா உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
விழாவின் 10-ஆம் நாளான சனிக்கிழமை (மே 30) விசாகத்தையொட்டி, சிறப்பு வழிபாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். மாலை வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதல், முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளித்தல் இரவு தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் கிரிவீதி வலம் வருதல் நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் திருச்செந்தூருக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால், கோயில் வளாகம் மற்றும் கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
பக்தர்களின் வசதிக்காக நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் நகராட்சி அலுவலகம் எதிரே, டி.பி. சாலை நீதிமன்றம் எதிரே. பழைய கோயில் காவல் நிலையம் அருகில், நகரின் எல்லையில் வேட்டைவெளி மண்டபம் அருகில் நாகர்கோவில் சாலையில் சிவில் சப்ளை கிடங்கு அருகே தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தற்காலிக கழிப்பறை மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்களை உரிய நிறுத்தங்களில் நிறுத்துமாறு போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் கடற்கரையில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், திருச்செந்தூர் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கட்டணமில்லா தரிசனம் (4 நாட்களுக்கு ரத்து): வைகாசி விசாகத்தையொட்டி வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மே 31) 4 நாட்களுக்கு ரூ. 100 கட்டண தரிசன முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் பொதுவழியில் கட்டணமின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு
சனி 30, மே 2026 5:31:15 PM (IST)

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

எம்எல்ஏக்களை விலைபேசும் தவெக: குதிரை பேரத்தை தடுக்க ஆளுநரிடம் அதிமுக அவசர மனு!
சனி 30, மே 2026 3:46:21 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு : அமைச்சர் ரமேஷுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம்!
சனி 30, மே 2026 12:09:48 PM (IST)

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவு : முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
சனி 30, மே 2026 11:57:20 AM (IST)


