» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் உள்பட புதிய ரயில் சேவை : ரயில்வே அதிகாரியிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!

வியாழன் 28, மே 2026 3:35:46 PM (IST)



தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று  ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகத்தில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் வி. பிரசன்னாவை நேரில் சந்தித்து, தூத்துக்குடி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

  • தூத்துக்குடியில் இருந்து காலையில் மதுரை அல்லது திருச்சி அல்லது போடிநாயக்கனூருக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும். அப்படி இயக்கப்படும் போது, தூத்துக்குடியிலிருந்து காலை 08:30 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி ரயிலை ரத்து செய்ய வேண்டும்.
  • மேட்டுப்பாளையம் ரயில் தினசரி ரயிலாக மாற்றம்: வண்டி எண். 16765-16766 தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர இருமுறை ரயிலைத் தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். அவ்வாறு இயக்கப்படும் போது, தூத்துக்குடியிலிருந்து இரவு 10:45 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி ரயிலை ரத்து செய்யலாம்.
  • வந்தே பாரத் ரயில் சேவை: தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும்.
  • பாலக்காடு ரயிலில் குளிர்சாதனப் பெட்டிகள் இணைத்தல்: வண்டி எண். 16791/16792 தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி விரைவு ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (2 Tier AC) ஒன்றும், மூன்று அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (3 Tier AC) ஒன்றும் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.
  • முத்து நகர் அதிவிரைவு ரயிலில் கூடுதல் பெட்டி: வண்டி எண். 12693-12694 தூத்துக்குடி - சென்னை - தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி (Sleeper Class) அல்லது மூன்று அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (3 Tier AC) ஒன்றை நிரந்தரமாக இணைக்க வேண்டும்.
  • மதுரை - சென்னை ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு: வண்டி எண். 22623-22624 மதுரை - சென்னை வாரமிருமுறை ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனைக் தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு: வண்டி எண். 22101/22102 மதுரை - லோக்மான்ய திலக் (மும்பை) - மதுரை வாராந்திர விரைவு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
  • மைசூர் ரயில் வருகை நேரம் மாற்றம்: வண்டி எண். 16236 மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில், தூத்துக்குடிக்குக் காலை 09:30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அதன் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
  • திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் நீட்டிப்பு: வண்டி எண். 56707-56708 திருநெல்வேலி - கன்னியாகுமரி - திருநெல்வேலி ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
இச்சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் மா. பிரமநாயகம், துணைத் தலைவர் எஸ். அந்தோணி முத்துராஜா நிர்வாகச் செயலாளர் ஜே.ஏ.என். ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகளின் தேவைகளை விவரித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கூடுதல் கோட்ட மேலாளர் வி. பிரசன்னா, கோரிக்கைகளை விரைவாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


மக்கள் கருத்து

தூத்துக்குடிக்காரன்மே 30, 2026 - 11:55:28 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடியிலிருந்து மும்பை ரயிலை கொங்கன் வழித்தடத்தில் கேட்டிருக்கலாம். ஏனெனில் தூத்துக்குடியிலிருந்து கொங்கன் வழித்தடத்தில் ரயில்கள் இல்லை. கூடுமானவரைக்கும் காலை நேர மணியாச்சி ரயிலை ரத்து செய்யாமல் இருப்பதே நல்லது. வந்தே பாரத் ரயிலை அவர்களாகவே (ரயில்வே நிர்வாகம்) கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் ஆனால் நாம் கேட்க வேண்டாம். மதுரைக்கு காலை நேரத்தில் ரயில் கேட்டது மிகவும் மகிழ்ச்சி. கன்னியாகுமாரி - திருநெல்வேலி ரயிலை தூத்துக்குடிக்கு நீட்டிப்பு கேட்டது மகிழ்ச்சி மற்றும் அதை மணியாச்சி பைபாஸ் வழியாக விரைவு ரயிலாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருநெல்வேலிக்கு ஒருமணிநேரத்தில் சென்றுவிடமுடியும். திருநெல்வேலி - தூத்துக்குடி பாசஞ்சர் ரயிலை மீண்டும் தினசரி ரயிலாக இயக்கி அந்த ரேக்கையும் பகல் நேரத்தில் பிஸியாக வைப்பது (இதை வைத்து கூடுதல் ரயில் சேவைகள் தூத்துக்குடிக்கு தேவை) தூத்துக்குடி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹென்றிமே 30, 2026 - 10:11:48 AM | Posted IP 172.7*****

மிகவும் சரியான கோரிக்கைகள். ஆனால் ரயில்வே நிர்வாகம் செவிடன் காதில் சங்கு ஊதும் கதைதான். தூத்துக்குடி திருவனந்தபுரம் தினசரி ரயில், தூத்துக்குடி மதுரை காலை மாலை டெமோ ரயில் மற்றும் தூத்துக்குடி கன்னியாகுமரி காலை மாலை என இரு மார்க்கங்களில் தினசரி ரயில் விட வேண்டும்.

Babuமே 30, 2026 - 09:40:45 AM | Posted IP 172.7*****

yen normal train itta track la odatha ilai athula ukkara paduka seat irukatha ?pothu makkalai karuthula vachu manu kudukanum vb already kollai ticket ithula vb than ottanuma sleeper kammi pannitu ac vachu ticket fare jasthiya vandiya otitu irukanuga athulam ungaluku theriyatha photo varanum nu ithu mathiri panuvangala manunu onnu kudutha kadasila yelai vara athu use fulla irukanum summa vilamparam

எந்த பயனும் இல்லைமே 29, 2026 - 10:32:38 AM | Posted IP 172.7*****

இவர்களின் ஒருத்தர் ஏற்கனவே கண்ணுமுழியிடம் மனு கொடுத்தார், பாவம், ஆனால் கண்ணுமுழியோ சிரிசிட்டே ஆய்வு னு சொல்லி எங்கயாச்சும் போச்சு, அடிக்கடி ஊர் சுற்றும் அரசியல்வாதிகளுக்கு விமான நிலையம் மட்டும் கண்ணனுக்கு தெரியுதாம், ஆனால் கஷ்டப்பட்ட மக்கள் கண்ணனுக்கு தெரியாதாம், இனி திருட்டு திராவிட குடும்பத்தில் மனு கொடுத்தாலும் எந்த பயனும் இல்லை.. இனி எத்தனை நாட்களாக அலையனும்??

Augustine Joseph Wமே 29, 2026 - 09:40:49 AM | Posted IP 162.1*****

மிகவும் சிறந்த கோரிக்கைகள். இவைகளை விரைவில் செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும். அருப்புக்கோட்டை ரயில்பாதை, ஆறுமுகநேரி வரையிலான புதிய ரயிலபாதை திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory