» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக வென்றால் சந்தோஷம்..? பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம்!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:38:48 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பலூர் (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரைத் திடீரென மாற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் (தனி) தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் ஜான்சிராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் அவர் தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென ஜான்சிராணி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா (37) புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சித் தலைமையின் இந்தத் திடீர் முடிவு தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுகன்யா, நேற்று மாலை 3 மணிக்குள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மனுத்தாக்கலைத் தொடர்ந்து அவர் உடனடியாகத் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

ஜான்சிராணி மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து கட்சி வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது, "திமுக பெண் வேட்பாளர்களை மக்கள் ஆதரித்தால் சந்தோஷம்தான்" என்று ஜான்சிராணி கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மாற்றுக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசியது கட்சியின் கொள்கைக்கு முரணானது என்பதால், அவர் மீது தலைமை அதிருப்தி அடைந்ததாகத் தெரிகிறது. இந்த சர்ச்சைக்குரிய கருத்தின் காரணமாகவே, தேர்தல் நெருங்கும் வேளையில் ஜான்சிராணி நீக்கப்பட்டு, புதிய வேட்பாளராகச் சுகன்யா களம் இறக்கப்பட்டுள்ளதாகப் பெரம்பலூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory