» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சூட்கேசில் கத்தரிக்கோல்: விஜய் பயணம் செய்த விமானம் சுமார் 30 நிமிடம் தாமதம்!

ஞாயிறு 15, மார்ச் 2026 9:34:20 AM (IST)



தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி புறப்பட்டபோது, அவரது பயணப் பையில் இருந்த கத்தரிக்கோல் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில், நேற்று மதியம் தனி விமானம் மூலம் அவர் டெல்லிக்குப் புறப்பட்டார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட 7 பேர் சென்றனர்.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து விஜய் அவர்கள் விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது, அவரது பயணப் பையை ஸ்கேன் செய்தபோது அபாயகரமான பொருள் இருப்பதாகச் சைரன் ஒலித்தது. பையைத் திறந்து சோதித்தபோது, அதில் சிறிய அளவிலான கத்தரிக்கோல் இருந்தது கண்டறியப்பட்டது.

விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி கத்தரிக்கோல் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், பாதுகாப்பு அதிகாரிகள் அதனை அகற்றினர். இந்தச் சோதனையினால் விஜய் பயணம் செய்த விமானம் சுமார் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

மதுபாட்டிலுக்கு அனுமதி மறுப்பு:

இதேபோல், விஜயுடன் சென்ற ஆதவ் அர்ஜுனாவின் பையில் உயர்தர மதுபானம் இருந்ததாகத் தெரிகிறது. அதனை விமானத்தில் கொண்டு செல்லப் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்ததால், அந்த மதுபானத்தை மீண்டும் காரிலேயே வைத்துவிட்டு அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.

டெல்லி சென்றடைந்துள்ள விஜய், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கோரப்பட்ட ஆவணங்களை இன்று அவர் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை இன்று மாலை வரை நீடிக்கும் என்றும், தேவைப்பட்டால் நாளை (திங்கட்கிழமை) மதியம் வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பின்னரே அவர் சென்னை திரும்பும் தேதி முடிவாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory