» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜன.10, 11ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் - ஆட்சியர் தகவல்!

வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜன.10 மற்றும் 11ஆம் தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறவுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் பொது (தேர்தல்) அவர்களின் அறிவுரையின்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில், 01.01.2026 - ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் முடிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இப்பணியினை மேற்கொள்ளும் போது, வாக்காளர் பதிவு அலுவலர்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விடுபட கூடாது என்றும், தகுதியற்ற நபர்களை, வாக்காளராக சேர்க்க  கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள்  மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் அதிகபட்ச சேர்க்கையை உறுதி செய்யவும் தேர்தல் செயல்பாட்டில் அவர்களது பங்களிப்பை அதிகரிக்கவும், தங்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்யவும் சிறப்பு இயக்கத்தினை, (Special Drive)  நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் படிவம் 6 மூலம் சேர்த்துக் கொள்ளவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மூன்றாம் பாலினத்தவர் தங்களது பெயர், முகவரி ,வயது, பாலினம், புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணை ஆகியவற்றினை திருத்தம் செய்திட படிவம் 8 மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  திருநெல்வேலி மாவட்டத்தில் இதற்கான சிறப்பு இயக்கம், (Special Drive) 11.01.2026 அன்று திருநெல்வேலி வட்டத்தில் உள்ள நரசிங்கநல்லூர் கிராமத்தில் காலை 11.00 மணி அளவிலும் இராதாபுரம் வட்டத்தில், வள்ளியூர் கிராமத்தில் காலை 11.00 மணி அளவிலும் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டத்தில், அம்பாசமுத்திரத்தில் மதியம் 02.00 மணி அளவிலும் மூன்றாம் பாலினத்தவர் குடியிருக்கும் பகுதியில் வைத்து  நடைபெற உள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் படிவம் 6 மூலம் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர், முகவரி ,வயது, பாலினம், புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணை திருத்தம் செய்திடவும், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என்று பதிவு செய்யவும் படிவம் 8 மூலம் சமர்ப்பிக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ்  தமிழ்நாடு உரிமைகள் ( TN-Rights) திட்டத்தில் பணிபுரியும் கள பணியாளர்கள் நாளை (10.01.2026) முதல் மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் இடத்திற்கே சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,  நீக்குதல், திருத்தங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளியாக பதிவு செய்தல் ஆகியவற்றுக்கான படிவம் வழங்க உள்ளார்கள்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளவும்,  தங்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்யவும்  உரிய ஒத்துழைப்பு நல்குமாறு திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  இரா.சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory